ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் தீவிரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

சோபியான்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொலை செய்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜைனாபோரா பகுதியில் உள்ள ரெபன் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத்தினர், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து, இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால், சிறிது நேரம் நடந்த இந்த துப்பக்கிச்சண்டை நின்ற நிலையில், தேடுதல் வேட்டையானது மீண்டும் துவக்கப்பட்டது. இந்த நிலையில், தேடுதல் வேட்டையின் போது, தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் மறைந்திருக்க கூடும் என நம்புவதால் தேடுதல் வேட்டையானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், உயிரிழந்த தீவிரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்படாத நிலையில், அதுகுறித்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோபியான் மற்றும் குல்காம் பகுதிகளில் இணைய சேவையானது துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: