×

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 13 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 5 செ.மீ, குமரி மாவட்டம் இரணியல், காமாட்சிபுரம், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், திருச்சி விமான நிலையம், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், லட்சத்தீவு, மாலத்தீவு, கேரளா கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் வரும் ஜூன் 10 மற்றும் 11ம் தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகம், தெற்கு உள் கர்நாடகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாகவும், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Showers ,Karaikal ,Tamil Nadu ,areas , Tamil Nadu, Puduvai, Karaikal, Rain, Chennai Weather Center
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...