×
Saravana Stores

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு வண்ணத்துப்பூச்சிகள் படையெடுப்பு: 25க்கும் மேற்பட்ட வகைகள் கண்டுபிடிப்பு

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு வண்ணத்துப்பூச்சிகள் படையெடுத்துள்ளன. அங்குள்ள உணவு பூங்காவில் 25 வகைக்கும்  மேற்பட்ட  வண்ணங்களில், வண்ணத்துப்பூச்சிகள் ரீங்காரமிட்டு வருகிறது. சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் சிறிய அளவிலான பூங்காவாக இருக்கும், இப்பூங்காவை நடுத்தர பூங்காவாக மாற்றும் பணிகள் ₹8 கோடியில் தொடங்கியுள்ளது. இங்கு தற்போது, புள்ளிமான்கள், கடமான்கள், முதலை, வண்ண பறவைகள், மயில்கள் உள்ளிட்டவை இருக்கிறது. சேலம் மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பொழுது போக்கு அம்சமாக விளங்கும் இந்த பூங்காவில், கடந்த 6 மாதத்திற்கு முன் சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் வண்ணத்துப்பூச்சி உணவு பூங்கா ஏற்படுத்தப்பட்டது. இங்கு, பல வண்ணங்களில் ஜொலிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றி வருகிறது. அப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகளின் உணவான அதிக தேன் சுரக்கும் பூக்களை தரும் ஜெனியா, ஜாஸ்மின், தேன்கொடுக்கு, கூப்பியா உள்ளிட்ட 38 வகையிலான செடிகள் வளர்க்கப்படுகிறது. இந்த செடிகளில் பூக்கும் பூக்களில் இருந்து தேன்களை சுவைக்க வண்ணத்துப்பூச்சிகள் படையெடுத்து வரத்தொடங்கியுள்ளது.

கோடை வெயில் முடிந்து, மழை பெய்ய தொடங்கியுள்ளதால், கடந்த சில நாட்களாக வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு பல்வேறு வகையிலான வண்ணத்துப்பூச்சிகள் வரத்தொடங்கியுள்ளன. இதனை பூங்காவின் வனச்சரகர் முரளிதரன் தலைமையிலான வன ஊழியர்கள் கண்காணித்து, கணக்கெடுக்கின்றனர். பல வண்ணங்களில் ரிங்காரமிடும் இந்த வண்ணத்துப்பூச்சிகள், ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து அதிகளவு வந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
காமன் ஜே, சிற்றஸ், கரிலிப், பிளைன் டைகர், புளு பட்டர் உள்ளிட்ட 25 வகைக்கும் அதிகமான வண்ணத்துப்பூச்சிகள் தற்போது உள்ளது. இவை செடிகளை சுற்றி வந்து தேன் அருந்துகிறது. சில வகையிலான வண்ணத்துப்பூச்சிகள் இரவு நேரத்தில் வந்துச் செல்கின்றன. அதனை வனத்துறை மற்றும் ஆர்வலர்கள் கணக்கெடுக்கின்றனர்.

இது பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வண்ணத்துப்பூச்சி உணவு பூங்காவில் செடிகளை நல்ல முறையில் வளர்த்து வருகிறோம். இதனால் தற்போது மிக அதிகளவு வண்ணத்துப்பூச்சிகள் வருகின்றது. புதிய வகையிலான வண்ணத்துப்பூச்சிகளை கண்டறியும் பணியில் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனை புகைப்படங்கள் எடுத்தும், ஆவணப்படுத்தி வருகிறோம். தற்போது கொரோனா ஊரடங்கால் பூங்கா மூடப்பட்டுள்ளது. அதனால், சுற்றுலா பயணிகளால் வண்ணத்துப்பூச்சிகளை பார்க்க முடியாத நிலை உள்ளது. பூங்கா திறக்கப்பட்டவுடன் மக்கள் ஆர்வமுடன் வந்து பார்ப்பார்கள்,’’ என்றனர்.


Tags : Invasion ,Kurumbapatti , Invasion,butterflies, Kurumbapatti zoo, more than 25 varieties
× RELATED நீதிமன்றத்தில் ஆஜராகாதவருக்கு பிடிவாரன்ட்