ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி வருகை: மாலத்தீவில் சிக்கி தவித்த 700 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடி: கொரோனா ஊரடங்கு காரணமாக மாலத்தீவில் தத்தளித்த 508 தமிழர்கள் உட்பட 700 இந்தியர்களை அழைத்துக் கொண்டு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதில் ஒரு கட்டமாக கடல் மார்க்கமாக இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஆப்ரேசன் சேது  என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி ஆங்காங்கே இருக்கக்கூடிய அந்தந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் கப்பல் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். அதில் ஒரு பகுதியாக இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ்.ஜலஸ்வா என்ற கப்பல் கடந்த 2ம் தேதி அன்று இலங்கையில் இருந்து சுமார் 213 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.

அதே ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பலானது தற்போது மாலத்தீவில் சிக்கி தவித்த சுமார் 700 இந்தியர்களை அழைத்து கொண்டு இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தது. ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பலில் வந்த 700 இந்தியர்களில் 655 பேர் ஆண்கள், 45 பேர் பெண்கள் ஆகும். இவர்கள் அனைவரும் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 508 பேரும், ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து 32 பேரும், மகாராஷ்டிரம் 4 பேர் மற்றும் ஒடிசாவில் இருந்து 24 பேரும், பீகார் மாநிலத்தில் இருந்து 25 நபர்கள், உத்திரபிரதேசம் 46 மற்றும்  பிற மாநிலங்களில் 14 பேர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 700 இந்தியர்கள் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பலில் வந்து சேர்ந்தனர். வருகை தந்த இந்தியர்கள் அனைவருமே தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலில் இருந்து இரக்கப்பட்டு, அவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனையானது நடைபெற்றது. தொடர்ந்து அவர்கள் உடல்கள் மீது கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு அவர்கள் பேருந்துகள் மூலமாக சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories:

>