×

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. அதைத்தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு தேர்வும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு தேர்வும் நடைபெறவுள்ளது. இதற்காக ஹால் டிக்கெட்டுகள் நாளை தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும் வழங்கப்படவுள்ளது. எனவே, ஹால் டிக்கெட் வழங்கும் பணி மற்றும், தேர்வு தொடர்பான மற்ற பணிகளை கவனிப்பதற்காகவும் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் நாளை காலை கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பேருந்து ஏற்பாடுகளும் அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 109 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும், பேருந்துகளில் பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,private school teachers , Government Schools, Private Schools, Teachers, Tamil Schools
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...