×

குடும்பத்தினர் அளித்த ஊக்கம் மற்றும் உற்சாகத்தால் கிணற்றில் நீச்சல் அடித்து அசத்தும் 2 வயது பெண் குழந்தை: வேலூர் அருகே மக்கள் வியப்பு

வேலூர்: குடும்பத்தினர் அளித்த ஊக்கம் மற்றும் உற்சாகம் காரணமாக 2 வயது பெண் குழந்தை நீச்சல் அடித்து அசத்தி வருவதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். குழந்தை பருவம் மிகவும் இன்றியமையாதது. கள்ளம் கபடமற்ற வெள்ளந்திச் சிரிப்பால் அன்பு மனங்களை கொள்ளையடித்து செல்லும் மந்திரப் புன்னகை குழந்தைகளுக்கு மட்டுமே உரித்தானது. இன்றைய கால குழந்தைகளின் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறன் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நீ 10 வயதில் கற்றுக்கொண்டதை நான் 2 வயதில் செய்து முடிப்பேன் என்கிற ரீதியில் குழந்தைகளின் செயல்பாடுகள் பாராட்டி மெச்சும் வகையில் உள்ளது. அந்த வகையில் வேலூரைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை கிணற்றில் குதித்து விளையாட்டில் நீச்சல் அடித்து அசத்தி வருவதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.வேலூர் அருகே மேல்மொணவூர் களத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் அங்கமுத்து(43), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி(31). தம்பதியருக்கு சுஷ்மிதா, அஸ்வின், யாழினி என 3 குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் அஸ்வின் 2வயது முதல் நீச்சல் அடித்து பழகிய நிலையில், தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நீச்சல் பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், 3வது மகளான 2 வயது பெண் குழந்தை யாழினியும் அண்ணனைப் போலவே நீச்சலில் ஆர்வத்துடன் காணப்பட்டார். இதனை அறிந்த அங்கமுத்து தனது 3வது மகள் யாழினிக்கு கடந்த ஒன்றரை வயது முதல் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றைச் சுற்றிலும், அம்மா, பெரியம்மா, அண்ணன்கள், அக்கா, தங்கை என குடும்பத்தினர் குழுமி நிற்க வாயில் பிஸ்கெட் மென்று தின்றபடி சென்றாள் குழந்தை யாழினி. அங்கமுத்துவின் கவுன்டன் கேட்டு குதிக்க தயாராகி 3 என்றவுடன் அடுத்த கணம் கிணற்றில் மூச்சை பிடித்துக் கொண்டு குதித்து லாவகமாக உள்நீச்சல் அடித்தும், நீந்தியும் சென்று அக்கரையை அடைந்தாள். கிணற்றை சூழ்ந்துள்ள குடும்ப உறவுகள் கைகளை தட்டி செல்லம்... நீந்துடா... என்று உற்சாகப்படுத்த குழந்தை யாழினி அங்கும் இங்குமாக நீச்சலடித்து அசத்துகிறாள்.

நீச்சல் அடிக்கும் திறமையைக் கண்ட கிராம மக்கள் யாழினியை கொஞ்சிக் குலாவி மகிழ்கின்றனர். இதுகுறித்து யாழினியின் தந்தை அங்கமுத்து கூறுகையில், எனது இரண்டாவது மகன் அஸ்வின் 5ம் வகுப்பு படித்து வருகிறான். அஸ்வினுக்கு 2வயதில் நீச்சல் அடிக்க கற்றுக்கொடுத்தேன். தற்போது அஸ்வின் காஞ்சிபுரத்தில் உள்ள நீச்சல் பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறான். இதன் தொடர்ச்சியாக எனது 3வது மகள் யாழினிக்கு ஒன்றரை வயது முதல் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறேன். என் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்து சிறந்த நீச்சல் வீரர்களாக உருவாக்க வேண்டும், என்பதுதான் என் வாழ்நாள் கனவு, என்றார் நம்பிக்கையோடு.

Tags : family Swimming ,baby girl ,Vellore , Excited 2-year-old, baby girl swimming , well with the encouragement,encouragement, family
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...