சிவகங்கை: சிவகங்கையில் பழைய அரசு மருத்துவமனைக்கு கொரோனா வார்டு மாற்றப்பட உள்ள நிலையில் அவைகளை சுத்தப்படுத்தும் பணியின் போது ஏராளமான பாம்புகள் படையெடுத்தன. சிவகங்கை நகர் பகுதியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த மருத்துவ மனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்த வளாகத்தில் ஹோமியோபதி மற்றும் சித்தா மருத்துவமனை, காச நோய் மருத்துவமனை ஆகியன இயங்கி வந்தன. இதில் தற்போது சித்தா பிரிவு புதிய மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இவைகள் தவிர முந்தைய அரசு மருத்துவமனையில் உள்ள மற்ற அனைத்துக்கட்டிடங்களும் காலியாக உள்ளன.
இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தனித்தனியே உள்ளன. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால் கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கன்றன. எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகள் சிதிலமடைய தொடங்கியுள்ளன. இந்நிலையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு வார்டு முந்தைய அரசு மருத்துவமனை கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதையடுத்து முந்தைய மருத்துவமனை வளாகங்களை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சுத்தப்படுத்தும் பணியின் போது பாம்புகள் ஏராளமானவை படையெடுத்தன. இதையடுத்து பாம்பு பிடிப்பவர்கள் அழைத்து வரப்பட்டு பாம்புகள் பிடிக்கப்பட்டன. இதில் 3 நல்லபாம்பு, 3 கட்டு விரியன், சாரைப்பாம்பு உள்பட 13 பாம்புகள் நேற்று பிடிக்கப்பட்டன. இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
தற்போது மருத்துவமனை வளாகம் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக உள்ளது. கட்டிடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கிறது. சில கட்டிடங்களில் மட்டுமே மருத்துவ மனை இயங்கிவருகிறது. மற்ற கட்டிடங்கள், புதர்களில் இருந்து பாம்புகள், பூச்சிகள் இப்பகுதி முழுவதும் செல்கின்றன. புதர்கள் முழுவதையும் அகற்றி மருத்துவமனை வளாகம் முழுவதையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்’ என்றனர்.