×

ராமநாதபுரம், சாயல்குடி கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் பசு ‘மெகா சைஸ்’ புள்ளி சுறா

* அரிய வகை உயிரினங்கள் அழிந்தது எப்படி?
* விசாரணை நடத்த மீனவர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி: ராமநாதபுரம், சாயல்குடி அருகே கடற்கரையில் ஒரே நாளில் கடல் பசு மற்றும் புள்ளி சுறா இறந்த நிலையில், கரை ஒதுங்கியது மீனவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் சுமார் ஒன்றரை டன் எடையளவு கொண்ட மெகா சைஸ் புள்ளி சுறா நேற்று இறந்து கரை ஒதுங்கியது, இதேபோல் சாயல்குடி அருகே ஒப்பிலான் கடற்கரையில் சுமார் ஒரு டன் எடையளவு கொண்ட கடல் பசு இறந்து கரை ஒதுங்கியது. பொதுவாக இதுபோன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், பாறைகள், கப்பல், படகு போன்றவற்றில் மோதி இறந்து கரை ஒதுங்குவது வழக்கம். தற்போது தடைக்காலம் முடிந்தாலும் பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்தச்சூழ்நிலையில் ஒரே நாளில் 2 அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியது மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இறந்த கடல்பசு, புள்ளி சுறா ஆகியவற்றின், உடல்கூறு அறுவை சிகிச்சை முடிவு அறிக்கையின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளர். பின்னர் இறந்து கரை ஒதுங்கிய கடல்பசு, புள்ளி சுறா இரண்டையும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அலுவலர்கள் மீட்டு, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடல் கூறு அறுவை சிகிச்சை செய்து கடற்கரையில் புதைத்தனர்.

Tags : shore ,Ramanathapuram ,Sayalgudi , Sea urchin, sea, shark
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு டன் பீடி இலைகள் பறிமுதல்