×

உத்தமபாளையத்தில் கடையை மூடச்சொல்லி காய்கறி கூடைகளை எட்டி உதைத்த போலீஸ்: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் பலசரக்கு கடையை மூடச்சொல்லி, காய்கறி கூடைகளை தள்ளி விட்ட ரோந்து போலீசை கண்டித்து, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஊரடங்கால் இரவு 9 மணிக்குள் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், நகரில் உள்ள பைபாஸ் சாலை, மெயின் பஜார், கிராமச்சாவடி பகுதிகளில் இரவு 8 மணிக்கே கடைகளை மூடச்சொல்லி ரோந்து போலீசார் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், ஆர்சி தெரு சாலையில் இருக்கும் ராஜா என்பவரின் மளிகைக்கடையை, பைக் ரோந்து போலீஸ்காரர் ஆதிநாராயணன் மூடச்சொல்லி உள்ளார். இதற்கு கடைக்காரர், ‘‘இரவு 8 மணிக்கே ஏன் மூடச் சொல்கிறீர்கள்? 9 மணி வரை நேரம் உள்ளதே’’ என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், கடையில் இருந்த காய்கறி கூடைகளை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், போலீசாரைக் கண்டித்து அவரை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு மற்றும் எஸ்ஐக்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘‘ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் எங்கள் பகுதியை மட்டும் போலீசார் குறி வைத்து பழி வாங்குகின்றனர். ஊரடங்கில் தளர்வு செய்தும் 8 மணிக்கே கடைகளை மூடச் சொல்வது என்ன நியாயம்? ரோந்து போலீசார் கடையில் இருந்த காய்கறி கூடைகளை எட்டி உதைத்து தள்ளியுள்ளார்’’ என குற்றம் சாட்டினர். இதையடுத்து போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Tags : shop ,blockade ,Uthamapalayam , Uthamapalayam, Vegetable Baskets, Police, Civil Siege
× RELATED அடகு கடையில் கொள்ளை முயற்சி