×

ஒரு வேளை சாப்பாட்டுக்காக... கூடை பின்னும் தொழிலாளியாக மாறிய வக்கீல்

பேராவூரணியை சேர்ந்தவர் வழக்கறிஞர் உத்தமகுமரன். பழங்குடி குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு சிரமங்களுக்கிடையில் படித்து வக்கில் பணியாற்றி வந்தார். பணிகளுக்குடையே தமது இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக குறிஞ்சி இன எழுச்சிக் கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி அவர்களது மேம்பாட்டிற்காக இயன்ற பணிகளை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் உதவி செய்வதற்கு யாருமில்லாததால், தங்களது இனத்தின் பாரம்பரிய தொழிலான கூடை பின்னும் தொழிலை செய்து வருகிறார்.

இது குறித்து வக்கில் உத்தமகுமரன் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டாலும் எங்களது இன மக்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளனர். எங்களது அடிப்படை தொழில் கூடை பின்னுவதும், கல் கொத்துவதும்தான், கொரோனா பயத்தால் கல் கொத்த யாரும் வீட்டில் அனுமதிப்பதில்லை. கூடைகளை வாரமும் ஒரு முறை கடைகளிலும், சந்தை நடைபெறும் ஊர்களுக்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வந்தோம். கொரோனாவால் கடைகள், சந்தை இல்லாததால் விற்பனை இல்லை. வயிற்று பசியை தீர்க்க வழியில்லை.

எங்களது இன மக்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. சட்டம் படித்த எனக்கும் தற்போது வேலை இல்லை. இதனால் குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் ஆற்றுப்பகுதிக்கு சென்று ஈச்சங்கோரைகளை வெட்டிவந்து கூடை பின்னுகிறேன். ஆனால் விற்க வழியில்லை. யாராவது வீடு தேடிவந்து வாங்கினால்தான் உண்டு. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த அளவே உள்ள எங்களது இன மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : lawyer ,Basket worker , Basket worker, lawyer
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது