வெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை....! தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் புயல் சின்னம் உருவாக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் என்னமோ வாட்டி வதைத்து வந்தது. ஆனால், இன்று மாலை முதல், நகரின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மேகமூட்டத்துடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

மதுரவாயல் பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் இடியுடன் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. பெரிய அளவுக்கான மழை இல்லை என்ற போதிலும் கூட வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை இருந்தது. புறநகர்ப் பகுதி மட்டுமின்றி நகரின் உள் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. அடையாறு, முகப்பேர் மேற்கு, கோட்டூர்புரம், கொளத்தூர், ஈக்காடுதாங்கல், கோயம்பேடு, அயப்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், வேளச்சேரி, குன்றத்தூர், மறைமலை நகர், வளசரவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே காலகட்டத்தில், அதாவது மாலை 6.30 மணிக்கு மேல், பெங்களூரு நகரில் மழை கொட்டி தீர்த்தது. அங்கு சென்னையை விடவும் அதிக அடர்த்தியுடன் கன மழை கொட்டியுள்ளது. தெற்கு பெங்களூரில், பொம்மனஹள்ளி, சில்க் போர்டு, பிடிஎம் லேஅவுட், பன்னேருகட்டா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: