×

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா?: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை!

டெல்லி: இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. 13 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா மார்ச் 29ம் தேதி மும்பையில் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 20 ஓவர் உலகக்கோப்பை  கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கால இடைவெளியில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆனால் போட்டியை இந்தியாவில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா? என்று முடிவு எடுக்க முடியாமல் பி.சி.சி.ஐ. உள்ளது. இந்தியாவில் நிலைமை சீரான பிறகு ஐ.பி.எல். போட்டிகளை நடத்தலாம் என்று பி.சி.சி.ஐ. அதிகாரிகளில் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் போட்டிகளை நடத்தவே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாடுகளில் நடத்தலாம் என்று மற்றொரு தரப்பில் குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் எங்கு நடத்துவது என்பது குறித்து எல்லாம் விரிவாக ஆலோசிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களே இவ்வாறு கருத்து தெரிவித்து வருவதால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தியாவில் 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்த போது பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய அரசு கூறியதால் அந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இதேபோன்று 2014ம் ஆண்டில் ஐ.பி.எல்-ன் தொடக்க ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : teams ,Cricket festival ,India ,Executives , The teams. Cricket, India, Overseas ?, BCCI Administrator, consensus, there
× RELATED வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை...