×

வழக்கை விரைந்து முடிக்க மத்திய அரசு கோரிய விவகாரத்தால் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சேலம் 8 வழிச்சாலை திட்டம்: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என  மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். சேலம் - சென்னை இடையே 277 கிலோ மீட்டர் தொலைவிற்கு 8 வழிச்சாலை என்னும் பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தது. திட்ட அறிவிப்பு வௌியான சில நாட்களிலேயே, இத்திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கணக்கெடுப்பை வருவாய்துறையினர் மேற்கொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர்  விவசாய நிலங்களை கையகப்படுத்தி 8 வழிச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படியே விவசாய நிலங்கள், ஏரி, குளங்கள், கிணறுகள், வீடுகள், மலைகள் போன்றவற்றை அழித்து சாலையை ஏற்படுத்த பூர்வாங்க பணிகளை தொடங்கினர். விளை நிலங்களை எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தமிழக அரசு, போலீசாரின் உதவியுடன் 5 மாவட்டத்திலும் கையகப்படுத்தப்படும் நிலங்களை அளவீடு செய்து எல்லை கற்களை நட்டது. அப்போது, ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள் கடுமையாக போராடினர். போலீசாரைக் கொண்டு அவர்களை கைது செய்து, எல்லை கற்களை வருவாய்த்துறையினர் நட்டுச் சென்றனர்.

இதையடுத்து, 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இத்திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருப்பதால், திட்டத்தை ரத்து செய்வதோடு,கையகப்படுத்தப்பட்ட நிலத்தை  உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த ஒரு ஆண்டாக  நிலுவையில்  இருந்த நிலையில், மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று முன்தினம் திடீரென உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டம் முடங்கி கிடப்பதாகவும் தெரிவித்து மனு தாக்கல் செய்தது. இதனால்,விரைவில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பியுள்ளனர். சேலத்தில் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நேற்று, பூலாவரி, குள்ளம்பட்டி ஆகிய இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டியதோடு, பூலாவரியில் தங்களது விவசாய நிலத்தில் கருப்பு கொடி ஏந்தி மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், ‘‘சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பசி, பட்டினியில் பலர் போராடி வருகின்றனர். இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ₹10 ஆயிரம் கோடியை கொரோனா தடுப்பு பணிக்கு ஒதுக்கி,பொதுமக்களின் உயிர் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு எதிராக போராடுவோம்,’’ என்றனர்.
இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மீண்டும் போராட்டத்தை கையில் எடுப்பது பற்றி ஆலோசனை கூட்டங்களை விவசாயிகள் நடத்தியுள்ளனர். இதனால், மீண்டும் 8 வழிச்சாலை பிரச்னை விஸ்வரூம் எடுக்கிறது.

விவசாயிகளுக்கு எதிராக நீதி அமையாது
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சேலத்தை சேர்ந்த விவசாயிகள் மோகனசுந்தரம், செவத்தராஜன், பாரப்பட்டி சின்னப்பன், தர்மபுரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதுபற்றி மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘இந்த 8 வழிச்சாலையால் விவசாயிகள் பாதிக்கப்படுவதையும், இது சட்டவிரோதமான திட்டம் என்பதையும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஆணித்தரமாக கூறியுள்ளது. அதனால், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பு விவசாயிகளுக்கு எதிராக அமையாது என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயத்தை அழிக்க யாரும் கூறமாட்டார்கள். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கினர். ஆனால், விவசாயிகள் தொடர்ந்து வியர்வை சிந்தியதால் தான், காய்கறி உள்பட உணவு பொருட்கள் அனைவருக்கும் கிடைத்தது. இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். தான் விவசாயி எனக்கூறும் முதல்வர், இத்திட்டத்தை கைவிட முன்வர வேண்டும்,’’ என்றார்.

தமிழக அரசு தீவிரம்
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உறுதுணையாக தமிழக அரசு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, வழக்கை விரைந்து முடிக்க மனு தாக்கல் செய்திருப்பது பற்றி நேற்று, அமைச்சர்கள் கருப்பண்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் கூறுகையில், ‘‘இத்திட்டம் தமிழகத்திற்கு தேவை, அதனால், 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம்,’’ எனக்கூறியுள்ளனர்.

* சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ₹10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.
* சேலத்தில் இருந்து சென்னைக்கு 340 கிலோ மீட்டர் பயணம் என்றிருப்பதை, இச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் 277 கி.மீ.,யாக குறையும் என அரசு தெரிவித்துள்ளது.
*  வ8வழிச்சாலை அமைவதால், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதியில் தொழிற்சாலைகள் அதிகளவு புதிதாக தோன்றும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
* இத்திட்டத்தின் படி சேலத்தில் 38 கி.மீ., தர்மபுரியில் 53 கி.மீ., கிருஷ்ணகிரியில் 2 கி.மீ., திருவண்ணாமலையில் 122 கி.மீ.,காஞ்சிபுரத்தில் 62 கி.மீ.,க்கு 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர்.


Tags : Black Flag , Salem ,8 Road Project, Farmers Strike ,Black Flag
× RELATED பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு...