×

தமிழகம் முழுவதும் கொரோனாவால் முடங்கியது சரக்கு போக்குவரத்து தொழிலில் ரூ.900 கோடி வருவாய் இழப்பு

வேலூர்: தமிழகம் முழுவதும் கொரோனாவால் முடங்கிய சரக்கு போக்குவரத்து தொழிலில் ₹900 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 13.35 லட்சம் டிரைவர், கிளீனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 65 லட்சத்து 45 ஆயிரத்து 492 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 637 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 28ஆயிரத்து 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் பலியாகியுள்ளனர். இப்படி கொரோனாவின் பாதிப்பு இருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்களும் ஏராளம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் போக்குவரத்து தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தென்மாநிலங்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் ஜவுளிகள், ஆயத்த ஆடைகள், ஜவ்வரிசி, சுண்ணாம்புக்கல், மளிகை பொருட்கள், பெட்ரோல், சமையல் காஸ், புளூ மெட்டல் ஆகியவை சரக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதேபோல் காய்கறிகள், பருப்பு, வெங்காயம், கோழித்தீவனம், எண்ணெய், கோதுமை, பால் பொருட்கள், ஹார்டுவேர் பொருட்கள், எலக்ட்ரானிக், இயந்திர உதிரி பாகங்கள், மோட்டார் வாகனங்கள் என்று வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றன. அதேபோல் வெளிமாநிலங்களுக்கு தினமும் 30 ஆயிரம் தமிழக லாரிகள் சரக்குகளுடன் பயணிக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்தது. தற்போது சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் 50 சதவீத லாரிகள் ஓடவில்லை. மாநில அளவில் லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் ₹15 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2 மாதங்களில் சுமார் ₹900 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், தமிழகத்தில் டிரைவர்கள், கிளீனர்கள் நேரடி வேலைவாய்ப்பை பெற்றவர்கள் 11 லட்சம் பேர். மறைமுக வேலைவாய்ப்பை பெற்றவர்கள் 3 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அதேபோல் தமிழகத்தில் 6 ஆயிரம் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 25 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பையும், பிற வகைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மறைமுக வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். சரக்கு போக்குவரத்து மற்றும் பஸ் போக்குவரத்து சேர்த்து ெமாத்தம் 13.35 லட்சம் பேரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.இதுகுறித்து சரக்கு மற்றும் பஸ் போக்குவரத்து சங்கத்தினர் கூறியதாவது:

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர், சரக்கு லாரி போக்குவரத்து தொழில் சகஜ நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகலாம். இதில் வங்கிக்கடன் தவணை செலுத்துவதற்கு 6 மாதங்களுக்கு சலுகையினை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் வட்டி தள்ளுபடி ஏதுமில்லை. 6 மாதங்களுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் டீசல் விலையை ₹20 வரை குறைக்க முடியும். தமிழகத்தில் மத்திய அரசு வரியுடன் வாட் வரியையும் சேர்த்து லிட்டருக்கு ₹2.50 வசூலிக்கிறார்கள். அண்டை மாநிலங்களில் லிட்டருக்கு ₹4 வரை குறைவாக டீசல் கிடைக்கிறது. மேலும் மத்திய அரசு தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது என்றது. ஆனால் சுங்கச்சாவடிகளை இயக்குபவர்களின் அழுத்தத்தால் கடந்த மாதம் 15ம் தேதியே வசூலிக்க தொடங்கி விட்டார்கள். 6 மாதங்களுக்கு சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.



Tags : Tamil Nadu ,Crippled , Coronation, Tamil Nadu ,crippled,loss ,Rs 900 crore
× RELATED கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி...