×

திருவண்ணாமலையில் தொடர்ந்து 3வது மாதமாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை: கிரிவலப்பாதை வெறிச்சோடியது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் 3வது மாதமாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், தடையை மீறி கிரிவலம் செல்வதை தடுக்க, கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், கடந்த பங்குனி, சித்திரை மாதங்களில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த மாதம் (வைகாசி) பவுர்ணமி கிரிவலம் செல்வதும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மண்டலத்துக்குள் பஸ் போக்குவரத்து இயங்கினாலும், பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 3.22 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 1.36 மணிக்கு நிறைவடைகிறது, எனவே, பக்தர்கள் கிரிவலம் செல்ல நேற்று இரவு உகந்ததாக இருந்தது.
ஆனால், கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால், பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்லவில்லை. ஒருசில உள்ளூர் பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் கற்பூரம் ஏற்றி வணங்கிவிட்டு சென்றனர். பக்தர்கள் கிரிவலம் செல்லும் 14 கிமீ பாதையும் வெறிச்ேசாடி காணப்பட்டது.மேலும், தடையை மீறி பக்தர்கள் கிரிவலப்பாதை வழியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொடர்ந்து மூன்று மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் தடைபட்டிருப்பது பக்தர்களை வேதனை அடையச்செய்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று பவுர்ணமி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் மட்டும் வழக்கம் போல நடந்தது. ஆனால், தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், கோயிலில் நடைபெற்ற வழிபாடுகள், பூஜைகள் அனைத்தும் அண்ணாமலையார் கோயில் இணையதளத்தில் வழக்கம் போல நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Tags : Thiruvannamalai ,pilgrims ,pilgrimage ,Purnami Girivalam , Thiruvannamalai pilgrimage , 3rd consecutive, month
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...