×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 43 டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுபான விற்பனை 30 சதவீதம் குறைந்தது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 43 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால், வழக்கமான விற்பனையில் 30 சதவீதம் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 16ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது, ஒவ்வொரு மதுக்கடையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. போலீஸ் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. கோர்ட் இடைக்கால தடையால் சில நாட்கள் மூடப்பட்டன. பின்னர், கோர்ட் தடை நீங்கியதும் வழக்கம் போல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து கடைகள் திறக்கும் நிலை உருவான பிறகு, வரிசையில் நின்று அலைமோதும் கூட்டம் குறைந்தது.இந்நிலையில், கொரோனா பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 215 டாஸ்மாக் கடைகளில் தற்போது 172 கடைகளில் மட்டும் விற்பனை நடைபெறுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இடம் பெற்றுள்ள 43 கடைகள் மூடப்பட்டுள்ளன.அதனால், வழக்கமான மதுபான விற்பனையை விட தற்போது 30 சதவீதம் விற்பனை குறைந்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரடங்கு இல்லாத வழக்கமான நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு ₹2.50 கோடி வரை மதுபானம் விற்பனை நடைபெறும். தற்போது, அதிகபட்சம் நாளொன்றுக்கு ₹2 கோடி அளவில் மட்டுமே மதுபானம் விற்பனையாகிறது.மேலும், மதுபானங்களின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால் விற்பனை தொகை கூடியிருக்கிறது. ஆனால், மதுபானம் வாங்குவோரின் எண்ணிக்கையும், வாங்கும் பாட்டில்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. அதனால், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கூட்டமின்றி காணப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டது மட்டுமின்றி, மதுப்பிரியர்களிடம் தற்போது பண நடமாட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. குறிப்பாக, மதுபான விற்பனையில் தினக்கூலி தொழிலாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. தற்போது, தொழிலாளர்களுக்கு தினசரி வேலை கிடைப்பதும், அதற்கான கூலி கிடைப்பதும் அரிதாகிவிட்டது. அதேபோல், மதுபானங்களின் விலையேற்றமும் வாங்குவோரின் எண்ணிக்கை குறைய காரணமாக மாறியிருக்கிறது. ஆனாலும், இத்தனை நெருக்கடிகள் நிறைந்திருக்கும் சூழ்நிலையிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்போதும் நாளொன்றுக்கு ₹2 கோடிக்கு மதுபானம் விற்பனையானது வியப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Tags : Task Shop Closures ,Thiruvanamalai District ,Thiruvanamalai District 43 Task Shop Closures , 43 Task Shop, Closures , Thiruvanamalai District
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...