×

கொரோனா ஊரடங்கால் வீடுகளில் நடக்கும் எளிமை திருமணங்கள்: கல்யாண மகால் ஆடம்பரங்கள் காலி

தேவாரம்: கொரோனா ஊரடங்கால் தற்போது திருமண விழாக்கள் வீடுகளில் எளிமையாக நடக்கத் தொடங்கியுள்ளன. பல லட்சங்களை கொட்டி செலவு செய்யும் கல்யாண மகால் ஆடம்பரங்கள் காலியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கால் தேனி மாவட்டத்தில் திருமணங்கள் வீடுகளில் மிக எளிமையாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டுமே திருமணங்கள் அதிகமாக நடக்கவில்லை. அதன்பின் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. பெரிய வீட்டு திருமணங்கள் என்றால் மிகப்பெரிய கல்யாண மகால்களை ஏற்பாடு செய்து 3 வேளை சாப்பாடு, கச்சேரி, மேளதாளம், பட்டாசு என லட்சக்கணக்கில் பணம் வாரியிரைக்கப்படும். இதெல்லாம், கொரோனா ஊரடங்கால் தலைகீழாக மாறிவிட்டன. தற்போது திருமண விழாக்கள் அனைத்தும் பெரும்பாலும் வீடுகளில் நடத்தப்படுகிறது.

வீடுகளுக்கு உறவினர்கள் குறைந்தது 20 பேர்; அதிகபட்சம் 50 பேர் என அழைத்து திருமணத்தை எளிமையாக நடத்துகின்றனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சம்பந்தங்கள் என்றால் மிக எளிமையாக 10 பேர் வந்து, உள்ளூரைச் சேர்ந்த 50 பேர்களுடன் திருமணத்தை முடித்து பெண்ணையும் கூப்பிட்டு சென்று விடுகின்றனர். இஸ்லாமிய வீட்டு திருமணங்களைப் பொறுத்தவரை குறைந்தது 500 பேருக்கு ஆட்டுக்கறி பிரியாணி விருந்து பரிமாறுவர். ஊரடங்கால் மிக எளிமையாக 50 பேர்களுக்குள் நடந்து விடுகிறது. இம்முறைதான் இஸ்லாத்தின் உண்மையான வழிமுறை என்றாலும், மற்ற மத நண்பர்களை அழைக்க முடிவதில்லையே என்ற வருத்தம் உள்ளது.

பழைய நடைமுறை திரும்பியது
30 ஆண்டுகளுக்கு முன்பு 90 சதவீத கல்யாணம் வீடுகளில்தான் நடக்கும். அப்போது ஊர், ஊருக்கு திருமண மகால் கிடையாது. வீடுகளில் திருமணம் நடக்கும் போது, வரும் உறவினர்களுக்கு வீடுகளிலேயே தயாராகும் உணவை பகிர்வது வழக்கம். அதே நடைமுறைதான் தற்போது திரும்பி உள்ளது. எளிமையாக நடக்கும் திருமணங்களால் அரிசி, காய்கறி, கறி வியாபாரம் பெரிதாக இல்லை. இதேபோல் மேளதாளம், பந்தல் அலங்காரம், சமையல்காரர்கள் என அனைவருக்கும் வேலையில்லாமல் போனது.

Tags : Simplicity Weddings ,Corona Curfew Homes ,Kalyan Mahal Luxury Galleries , Simplicity Weddings , Corona Curfew , Kalyan Mahal Luxury Galleries
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...