×

கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடு, எலும்புகளுடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருப்புவனம்:கீழடி அருகே கொந்தகையில் நடந்த அகழாய்வில் மண்டை ஓடுகளுடன் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியை தொடர்ந்து கொந்தகையில் கடந்த பிப். 27ம் தேதி அகழாய்வு தொடங்கியது. முதலில் 4 முதுமக்கள் தாழிகள், ஆறு சிறிய மண்பானைகள் கிடைத்தன. எனவே கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்க கூடும்; குறைந்தபட்சம் 15 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது சுரேஷ் என்பவரது நிலத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் அருகே சுரேஷின் சகோதரர் கதிரேசன் என்பவரது நிலத்தில் நேற்று தென்னங்கன்றுகள் வைக்க இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அப்போது ஒரு இடத்தில் முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து நில உரிமையாளர் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் பாஸ்கரன், ரமேஷ், ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் சேரன், ஓய்வு பெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் பிச்சப்பன் தலைமையிலான குழுவினர் முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தனர். தாழியினுள் மண்டை ஓடு, எலும்புகள், உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவை இருந்தன. அவற்றை பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர். ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘பண்டைகாலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்தது. இதை நிரூபிக்கும் வகையில் தற்போது உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த பின்னர்தான் இதன் காலம் பற்றி அறிய முடியும். கொந்தகை அகழாய்வு பரப்பளவை மேலும் கூடுதல் பணியாளர்களுடன் மேற்கொண்டால் பண்டைய தமிழர்கள் பற்றிய பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புண்டு’’ என தெரிவித்தனர்.

Tags : bottom ,Bones , skull , vault, bottom , elderly with bones
× RELATED மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள...