×

7 ஆண்டிற்கு பின் பொதுமேலாளர் நியமனம் தூத்துக்குடி கோட்டத்தில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்டத்திற்கு 7 ஆண்டிற்கு பிறகு பொதுமேலாளர் பொறுப்பேற்றுள்ள நிலையில் நகர பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது கோட்டம், மண்டலம் வாரியாக இயங்கி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதிதாக உருவான தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு சேர்த்து நெல்லையில் தான் நிர்வாக இயக்குநர் உள்ளார். இந்த 4மாவட்டங்களில் புதிய வழித்தட பேருந்தை தொடங்குவது முதல் இயக்குவது சம்பந்தமான வணிகம், டெக்னிக்கல், எப்சி, பதிவு எண் என அத்தனை அதிகாரங்களும் நெல்லை நிர்வாக இயக்குநர் வசம் இருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியை தனிக்கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் விடுக்கப்பட்ட தொடர் கோரிக்கை அடிப்படையில், கடந்த 20.06.2013ல் தூத்துக்குடி தனி கோட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், தூத்துக்குடியில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு தூத்துக்குடியில் பதிவு செய்து பதிவு எண்(டி.என் 69) வழங்கப்படவில்லை. கன்னியாகுமரியில் டி.என் 74 என்றும், திருநெல்வேலியில் டி.என் 72என்றும் பதிவு எண் கொடுக்கப்படுகிறது.

தனி கோட்டமாக பிரித்த பிறகும் தூத்துக்குடியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் தூத்துக்குடியில் பதிவு செய்யப்படவில்லை. தூத்துக்குடி கோட்டத்திற்கு பொதுமேலாளர் நியமிக்கப்படாததால் நெல்லை கோட்ட கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது.
இந்நிலையில் 7 ஆண்டிற்கு பிறகு தூத்துக்குடி கோட்டத்திற்கு பொதுமேலாளரை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் பொதுமேலாளராக பணியாற்றிய சரவணன், தூத்துக்குடி தனி கோட்டத்துக்கு பொதுமேலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இனிமேலாவது மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் தேவை அறிந்து பேருந்து வசதிகள் பூர்த்தி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
அதோடு மாவட்டத்தின் அனைத்து பணிமனைகளில் இருந்தும், முக்கிய நகரங்களில் இருந்தும் கிராமங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக நகர பேருந்து வசதியினை தாமதமின்றி செய்து கொடுத்திட வேண்டும் என்றும் பயணிகள் வலியுத்தியுள்ளனர்.

300 பேருந்துகள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகரம் டெப்போவில் இருந்து 61 பேருந்துகளும், தூத்துக்குடி புறநகர் டெப்போவில் இருந்து 44 பேருந்துகளும், திருச்செந்தூர் டெப்போவில் இருந்து 55 பேருந்துகளும், கோவில்பட்டி டெப்போவில் இருந்து 68 பேருந்துகள், வைகுண்டம் டெப்போவில் இருந்து 34 பேருந்துகளும், சாத்தான்குளம் டெப்போவில் இருந்து 4 பேருந்துகளும் என மொத்தம் சுமார் 300 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Tuticorin ,public , General public ,appointed, 7 years, buses , Tuticorin
× RELATED 9-வது மாவட்டமாக தூத்துக்குடி...