×

நிர்ணயித்த ஊதியத்தை வழங்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பணியாளர்கள் போராட்டம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 175 பேர் உள்ளனர். பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள்,  பம்ப் ஆபரேட்டர்கள், குடிநீர் பராமரிப்பு பணியாளர்கள், தெருவிளக்கு  பராமரிப்பு பணியாளர்கள் என கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்கிறார்கள்.
இவர்களுக்கு,₹10 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த  ஊதியத்தை வழங்க கோரி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் தொடர்ந்து மனு  கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை நிர்ணயித்த சம்பளத்தை வழங்கவில்லை என  கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை பணியாளர்கள் திரண்டனர். ஏஐடியுசி சங்க தலைவர் தேவராஜன், செயலாளர் வரதன் ஆகியோர் தலைமையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து செயல் அலுவலர் ரவிகுமார், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசம் பேசினார். பின்னர், ஓரிரு நாட்களில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.Tags : Bar Office , Staff struggle , front, Bar Office , fixed wage
× RELATED ஊத்துக்கோட்டை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்