×

கொரோனா இறப்பு எண்ணிக்கையில் முரண்பட்ட அறிக்கை தவறை திருத்திக்கொண்டது சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் தினமும் அறிக்கை வெளியிடப்படுகிறது. அதில் மொத்த பாதிப்பு, மாவட்ட வாரியாக பாதிப்பு, இறப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும். இதை பின்பற்றி மறுநாள் காலை மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக பாதிப்பு, இறப்பு, குணமடைந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக வெளியிடப்படும். இதில் சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கைக்கும், மாநகராட்சி வெளியிடும் அறிக்கைக்கும் பல்வேறு முரண்பாடுகள் இருந்தது. அதன்படி ஜூன் 2ம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் 150 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்பட்டது. இதைப் பின்பற்றி ஜூன் 3ம் தேதி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் 135 பேர் மட்டும் இறந்ததாக கூறப்பட்டிருந்தது.

இதை சுட்டிக்காட்டி ஜூன் 4ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள மாநகராட்சி முறையான இறப்பு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 4ம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் 166 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதை எண்ணிக்கை நேற்று காலை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது. தினகரன்  செய்தி எதிரொலியாக அறிக்கையை மாநகராட்சி முறையாக வெளியிட்டிருந்தாலும் இத்தனை நாட்கள் இந்த முரண்பாடு ஏன் வந்தது என்பது தொடர்பாக மாநகராட்சி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த 4ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை மாநகராட்சி அளித்த அறிக்கையின்படி சென்னையில் 139 பேர்  உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் 166 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் மாநகராட்சி அறிக்கையின்படி சென்னையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் 12 பேர் மட்டும் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது. எனவே இறப்பு எண்ணிக்கையில் ஏன் இவ்வளவு குளறுபடிகள் ஏற்படுகிறது என்று மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Madras Corporation ,Death , Correction, Coronal Death Corrections, Corrected , Madras Corporation
× RELATED காருக்குள் கேரள தொழிலதிபர்...