×

கொரோனா வேகமாக பரவும் நிலையில் தடையை மீறி மெரினாவில் மக்கள் நடைபயிற்சி: கூட்டம் கூடி அரட்டை

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவசம் அணியாதது, அரசின் அறிவுரைகளை காற்றில் பறக்க விடுவது உள்ளிட்டவைகளே சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரையில் உள்ள உட்புற சாலைகளில் மக்கள் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக தடுப்புகளையும், கொரோனா எச்சரிக்கை போஸ்டர்களையும் போலீசார் அமைத்திருந்தனர். மக்கள் கூட்டம், கூட்டமாக மெரினாவில் கூடும்போது அது கொரோனா பரவ ஏதுவாக அமைந்துவிடும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், 5ம் கட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க அரசு எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடவில்லை. ஆனால், பொதுமக்கள் அரசின் தடை உத்தரவை மீறி தற்போது காலை, மாலை என இரண்டு வேளையும் நடைபயிற்சி சென்று வருகின்றனர். இவர்களில் பலர் முகக்கவசம், கையுறை அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடைபயிற்சி செல்கின்றனர். இதேபோல், உட்புற மற்றும் வெளிப்புற சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து அரட்டை அடித்து வருகின்றனர். காலை 5 மணிக்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நடைபயிற்சிக்கு செல்வதால் அவர்களை திருப்பி அனுப்புவது போலீசாருக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஒலிப்பெருக்கிகள் மூலம் நடைபயிற்சி செல்பவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர். ஆனால், பலரும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். அரசின் அறிவுரைகளை மதிக்காமல் மக்கள் தொடர்ந்து இதுபோன்று நடந்துகொண்டால் சென்னையில் கொரோனா பரவலை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியாது என மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

Tags : marina ,Corona ,crowd gathering , People , marina, barrier, Corona, spreading , Meeting and chatting
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...