×

கடும் நெருக்கடியில் காகித கோன் தயாரிக்கும் தொழிற்சாலைகள்

சென்னை: காகித கோன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் 8 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முடக்கப்பட்டதில் காகித கோன் தயாரிக்கும் தொழிற்சாலையும் அடங்கும். நூற்பாலைகளில் நூல் சுற்றப் பயன்படும் இன்றியமையாத பொருள் காகித கோன். அதேபோல, ஓபன் எண்ட் ஸ்பின்னிங் நூற்பாலைகளில் காகித டியூப்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், காகித ஆலைகளில் காகிதம் சுற்றவும், விசைத்தறி துணிகள் சுற்றவும், பம்பு செட்டுகள் பேக்கிங் செய்யவும் காகித டியூப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் 400 காகித கோன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இவை அணைத்தும் சிறு, குறு, தொழிற்சாலைகளாக இயங்கி வருகின்றன. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோபி, ராஜபாளையம், திண்டுக்கல், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். அதில் 70 சதவீதம் பெண்கள். இந்த தொழிற்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 275 டன் காகித டியூப்புகளும், 60 லட்சம் காகித கோன்களும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்தப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் கிராப்ட் போர்டு மற்றும் மில் போர்டு காகிதம் சுமார் 700 டன் தேவை.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் இந்த தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் காகித கோன், டியூப் தொழில் மிகப் பெரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. நூற்பாலைகளிலும், இதர தொழில்களிலும் இப்பொருட்களுக்கான தேவை பாதிக்கு மேல், வீழ்ச்சி அடைந்து விட்டது. தற்போது 50 சவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் முக்கிய மூலப் பொருட்களான கிராப்ட் போர்டு, மில் போர்டு தயாரிக்கும் காகித ஆலைகள் இவற்றின் விலையை டன் ஒன்றுக்கு ₹1500 முதல் ₹3000 வரை விலையை உயர்த்தி விட்டனர். இந்த விலை உயர்வு, காகித கோன், டியூப் உற்பத்தியாளர்கள் மீது பேரிடியாக இறங்கியுள்ளது. மற்றொருபுறம் நூற்பாலை உரிமையாளர்கள் தங்கள் சந்தித்து வரும் நெருக்கடியை காரணம் காட்டி காகித கோன் விலையை குறைக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பல வழிகளிலும் இந்த தொழில் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கிற்கு முன் நூற்பாலைகளுக்கு விற்பனை செய்த வகையில் வரவேண்டிய பணம் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. வங்கிகளில் வாங்கியுள்ள கடன் மீது வட்டி கட்ட முடியாமல் உரிமையாளர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். சுய தொழில் செய்யும் கனவில் தொழில் முனைவோராக இந்த தொழிலில் காலடி எடுத்து வைத்த பலர், தங்களது எதிர்காலமே இருண்டு விட்டதாக கலங்கி நிற்கின்றனர்.

கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்று இந்த தொழில் நிறுவன உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த விநாயகா கோன் நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:நாங்கள் கஷ்டப்பட்டுத்தான் தற்போது இந்த தொழிலை நடத்தி வருகிறோம். ஏற்கனவே பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் தொழிலை நடத்த முடியாமல் திணறி வருகிறோம். கொரோனா காலத்திற்குப் பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் நாங்கள் நிறுவனத்தி நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் பெரும்பாலும் பெண்கள்தான் வேலை செய்கின்றனர். இதனால் அவர்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் தொடர்ந்து நாங்கள் தொழிலை நடத்த வேண்டும் என்றால், காகித கோன் தயாரிப்புக்கான பேப்பர் விலையை குறைக்க வேண்டும், குறிப்பிட்ட மாதங்கள் வரை ஜிஎஸ்டி கட்டுவதை தவிர்க்க உத்தரவிட வேண்டும், வங்கியில் கடனுக்கு வட்டி கட்டுவதை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை தள்ளி வைக்க வேண்டும், மேலும், நூற்பாலைகள் எங்களிடம் காகித கோனுக்கான விலையை குறைத்து விட்டனர். அந்த விலையை கூட்டித் தரவேண்டும் என்றார்.

Tags : factories ,crisis , Paper, cone making factories , severe crisis
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...