×

சிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா?

சிவகாசி: சிவகாசி அருகே நடையனேரியில் மழையால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து விழுந்தது. சிவகாசி அருகே நடையனேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகின்றது. 1 முதல் 3 வகுப்பு வரை உப்புகாச்சி ஓடை அருகில் உள்ள கட்டிடத்திலும் சுமார் 300 மீட்டர் தூரத்தில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 4, 5ம் வகுப்புகள் ஒரு கட்டிடத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு பள்ளி கட்டிடமும் கடுமையாக சேதமடைந்த நிலையில்தான் செயல்பட்டு வந்தது. இதில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள 4, 5 வகுப்புகள் நடைபெறும் பள்ளி கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பழைய கட்டிடத்தை அடிக்கடி மராமத்து செய்து வந்துள்ளனர். இருந்த போதிலும் கட்டிடம் அபாய நிலையில் இருந்துள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி இயங்கவில்லை. இந்நிலையில் இந்த பகுதியில் சமீபத்தில் இடியுடன் கனமழை பெய்தது. மழைக்கு பள்ளி கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் இடிந்து விழுந்தது. மேலும் வகுப்பறையின் மேற்கூரையும் பெயர்ந்து விழுந்துள்ளது. பள்ளி இயங்காததால் வேறு அசம்பாவிதம் ஏற்படவில்லை. பள்ளி கட்டிடம் அருகே கோயில் மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளன. கட்டிடத்தின் மற்ற பகுதிகளும் இடிந்து விழும் நிலையில்தான் உள்ளது. எனவே  இக்கட்டித்தை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government school ,Sivakasi , Sivakasi, rain, damaged government school
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...