×

சமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி

பழநி: பழநி பஸ்நிலையத்தின் நடைமேடை சமையற்கூடமாக மாறியதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 70 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த 1ம் தேதி முதல் பொது போக்குவரத்திற்கு விதித்திருந்த தடை தமிழக அரசால் நீக்கப்பட்டது. எனினும், தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்குள் பஸ் போக்குவரத்தை அனுமதித்தது. குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுவதால் 2 பிரிவுகளாக இருக்கும் பழநி பஸ் நிலையத்தின் விரிவாக்கப்பட்ட பகுதியில் காய்கறி சந்தையும், டவுன் பஸ்கள் நிறுத்துமிடம் பஸ் நிலையமாகவும் செயல்படுகிறது.

டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் சில டீக்கடைகள் பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரங்கள் செய்வதற்கு பஸ் நிலைய நடைமேடையை சமையற்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் சிலரின் ஆசீர்வாதத்தால் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தடையின்றி நடைபெறுகிறது. நடைமேடையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொள்வதால் பயணிகள் வெயிலில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு உள்ளாகின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு அபராதம் விதிப்பு மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் மற்றும் இடமாற்றம் போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பயணிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,Travelers Culinary Basin Stage , Cooking, Pazani Bus Stand, Awadi
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை