×

சேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது. அங்கு வாடகைக்கு கடைகள் கட்டும் பணி நடப்பதால் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட மின்நகருக்கு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் மீண்டும் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து செம்மண் கொட்டி சமன் செய்து வாடகைக்கு கடைகளை விடும் நோக்கில் தீவிரமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறார். ஏற்கனவே கடைகள் கட்டி இறைச்சி கடை இயங்கி வருவதால் இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் நெடுஞ்சாலையிலேயே இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் தொடர் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதிய கடைதிறக்க தீவிரமாக கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது.

இதற்கு முன் இரண்டு கடைகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது இந்த சாலை நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து நகாய் திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகமும், நகாய் திட்ட அதிகாரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளான இடத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகளை தடுத்தும் ஆக்கிரமிப்புக்குள்ளான இடத்தை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sethiyathope ,area ,National Highway ,Chetiyathorup , Sethiyathope, National Highway, Private Occupation
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...