×

குமரி அரசு மருத்துவமனைகளில் கால் நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்

மார்த்தாண்டம்: குமரியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் நாய்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பு ஊசி போட வேண்டியது கட்டாயமாகும். தற்போது அரசு மருத்துவமனைகளில் நாய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் இல்லை என்று தெரிகிறது. இதனால் மருத்துவர்கள் தனியார் மருந்து கடைகளில் வாங்கி வருமாறு அறிவுறுத்துகின்றனர். இந்த மருந்துளின் விலை அதிமாக இருக்கிறது. ஆகவே வசதி படைத்தவர்கள் வாங்கி வந்து விடுகின்றனனர். அதே வேளையில் நடுத்தர மக்கள் தங்களது செல்ல பிராணிகளுக்கு ஊசி போடாமல் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று திருப்பி அழைத்து சென்று விடுகின்றனர்.

இதேபோல ஆடு, மாடுகளுக்கும் கூட உரிய தடுப்பு ஊசி, நோய்க்கான மருந்துகள் இருப்பு இல்லை என்ற நிலை தற்போது அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் காணப்படுகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாகர்கோவிலை மாநகராட்சியாகவும், குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகியவற்றை நகராட்சியாகவும், 55 பேருராட்சிகளையும், ஊராட்சிகளையும் கொண்டு விளங்குகிறது. இங்கு வசிக்கும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இவைகளுக்கு ஏற்படும் உடல் நல குறைவுகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு கால்நடை மருத்துவமனையை நம்பியே உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மருத்து தட்டுப்பாட்டை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு தனியார் மருந்தகங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட தொடங்கி உள்ளன. இதனால் பலர் நாய், ஆடு, மாடுகளுக்கான தடுப்பூசிகளை போடாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். எனவே அரசு கால்நடை மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருந்தகங்களில் தேவையான மருந்துகள் இருப்பு இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இருப்பு இல்லாத கால்நடை மருத்துவமனைகளுக்கு மருந்துகளை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக வெறிநாய் கடிக்கான ஆன்டி ரேபீஸ் மருந்து, ஆடு, மாடுகளுக்கு ஏற்படுகின்ற நோய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் மற்றும் அனைத்து வகை நோய்களுக்கான மருந்துகளையும் குமரி மாவட்டத்தில் உள்ள கால்நடை அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

திரும்பி செல்கின்றனர்
குமரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் வெறி நாய் கடிக்கான தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லை என்பது நாய் வளர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு. இந்த மருந்தை வெளியில்  வாங்க சுமார் ரூ. 600 செலவு செய்ய வேண்டுமாம். வசதி படைத்தவர்கள் மருந்து வாங்கி வந்து அரசு கால் நடை மருத்துவமனைகளில் போட்டு செல்கின்றனர். வசதியில்லாதவர்கள் மருந்து இருப்பு இல்லை என்றதும் திரும்பி சென்று விடுகின்றனராம்.

Tags : Kumari ,hunt ,pharmacies , Kumari Government Hospital, Veterinary Drugs, Shortage
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!