×

இருக்கும்போது அருமை தெரியல... போன பிறகு தொழிலே நடக்கல வடமாநில தொழிலாளரை மீண்டும் அழைத்து வர முடிவு: அதிக கமிஷன் தருவதாக புரோக்கர்களுக்கு கான்டிராக்டர்கள் வலைவீச்சு

சென்னை : ஊரடங்கால், வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அவர்களை மீண்டும் அழைத்து வருவதாக வாக்குறுதி அளிக்கும் புரோக்கர்களுக்கு, தொழிலதிபர்கள் பணத்தை வாரி வழங்குகின்றனர். தமிழகத்தில் ஒரு சொலவடை இருக்கிறது. அருகில் இருக்கும்போது அதன் அருமை தெரியாமல் அநாதையாக திரியவிடுவதும், விரட்டுவதும் மனிதர்களின் வாடிக்கை. ஆனால் கோடிகளில் பணம் கொட்டப்போகிறது என்றால் ரேஷன் அரிசிக்கு பதில் பாசுமதி அரிசியே வாங்கித் தருகிறேன் என்று ஆசை காட்டுவது வழக்கம். காரணம் அந்த பல கோடி வியாபாரம் தன்னை விட்டு போகக் கூடாது என்பதுதான். அந்த நிலை தான் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக  தமிழகத்தில் கட்டுமானப் பணி, கிரானைட் ஆலைகள், ஓட்டல், ஜவுளி கடை, கார்மென்ட், ஆடு, கோழி பண்ணைகள், பட்டறை உள்ளிட்ட பெரும்பாலான தொழிற்கூடங்களில், வடமாநில தொழிலாளர் ஏராளமானோர் பணிபுரிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு சென்றனர். எழும்பூர், திருப்பூரில் இருந்து மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்றனர். வேலூர் வழியாக 20 ஆயிரம் பேர் சென்றனர். திருச்சியில் இருந்தும் ஆயிரக்கணக்கில் சென்றனர். ஊரடங்கு தளர்வால், தற்போது, பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஆலைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் வேலை தெரிந்த தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளருக்கு சம்பளம் அதிகரித்து தந்தாலும், வடமாநில தொழிலாளர் செய்த பணியை ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக, ஓட்டலில் சுத்தப்படுத்தல், கோழிப்பண்ணையில் கழிவை அகற்றுதல் உள்ளிட்ட பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால், வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டிய நிலைக்கு, அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்காக, சொந்த ஊருக்கு செல்லாமல் தவிக்கும் வடமாநில தொழிலாளரை வளைக்க, புரோக்கர்களை களம் இறக்கி விட்டுள்ளனர். அவர்கள், வடமாநில தொழிலாளருக்கு சம்பளம் அதிகரிப்பு, சலுகை வழங்குவதாக உறுதியளித்து, பணியில் ஈடுபடுத்த முயற்சிக்கின்றனர். அத்துடன், சொந்த ஊர் சென்றவர்களை, பழைய படி பணிக்கு அழைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர். இதற்காக, ஒரு தொழிலாளிக்கு, 1,000 ரூபாய் வீதம், புரோக்கர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன், தற்போது, 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரும், வடமாநில தொழிலாளரை பணிக்கு அழைத்து வரும் புரோக்கர்களாக மாற தொடங்கியுள்ளனர். ஒரு மாதத்தில், 1.25 லட்சம் தொழிலாளர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், உத்தரபிரதேச, ஆந்திர மாநிலங்களுக்கு சென்றனர்.

Tags : business ,Northern Territory ,contractors ,Commissioners ,Higher Commission ,commission ,
× RELATED தொழில் தொடங்க விரும்புவோருக்கு உடனடி...