×

மாஸ்க் அணியாமல் சுற்றினால் வழக்குப் பதிவு செய்து தனிமைப்படுத்தப்படுவார்கள்: சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி எச்சரிக்கை

சென்னை:  சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பின்னர் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத வைரஸ் என்பதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், கை கழுவுதலையும் தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும். தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் தற்போதைய சூழலை மக்கள் உணராமல் நாங்கள் கூறும் அறிவுரைகளை உள்வாங்க மறுப்பதே சவாலான விஷயமாக உள்ளது. முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக செயல்படுபவர்கள் மீது காவல் துறை உதவியுடன் வழக்கு பதியப்படும். தனிமைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்கள் தங்களுடன் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அதை தட்டிக் கேட்க வேண்டும்.

வீட்டு தனிமை ரத்து
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சி சார்பில் சமுதாய கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபம்  ஆகிய இடங்களில் 30 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய திட்டமிட்டு  இருக்கிறோம். பொருளாதாரத்தில்  பின் தங்கியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பும் போது நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி முதன் முறையாக துவங்கியுள்ளது. குணமடைந்தவர்களை பணிக்கு மீண்டும் எடுக்காமல் தவிர்க்கும் நிறுவனங்கள்  மீதும், சான்றிதழ் வாங்கி வர வற்புறுத்தும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுத் தனிமைப்படுத்தலை சிலர் சரியாக கடைப்பிடிக்காமல் இருப்பதால் சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு தனிமைப்படுத்தலை முழுவதுமாக ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளோம்’’ என்றார்.



Tags : IAS officer , mask ,wear around,isolated, Special ,IAS, officer
× RELATED தூங்காநகரின் நெடுநாள் நெரிசலுக்கு...