×

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்: தூதர் மன்னிப்பு கோரினார்

புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் இருந்த மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்தவர் போலீஸ் அதிகாரியால் கழுத்தில் கால் வைத்து மிதித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக போராட்டங்கள் வலுத்துள்ளதோடு, ஆங்காங்கே வன்முறைகளும் கலவரங்களும் வெடித்து வருகின்றன. பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், அதனை மீறி பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டன்னில் இந்திய தூதரகத்துக்கு வெளியே இருந்த மகாத்மா காந்தி சிலை அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் மூலமாக சேதப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார்.இது குறித்து கென்னத் தனது டிவிட்டர் பதிவில், “வாஷிங்டன்னில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தயவு செய்து எங்களது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். ஜார்ஜ் பிளாய்ட்டின் கொடூரமான மரணம் மற்றும் மோசமான வன்முறை, கலவரங்களால் திகைத்துள்ளோம். எந்தவொரு வகையிலும் தவறான எண்ணங்கள் மற்றும் பாகுபாட்டுக்கு நாங்கள் துணைப்போக மாட்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.



Tags : Ambassador ,US ,Gandhi , Ambassador apologizes , damaging Gandhi statue,US
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...