×

திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது வைர கவசத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தினமும்  அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அபிஷேகங்களால் உற்சவர்கள் சிலை சேதமடையும் வாய்ப்புள்ளது. எனவே, உற்சவர் சிலை சேதமடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சிலைக்கு அணிவிக்கும் தங்ககவசம் அகற்றி சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு பூஜை ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாத பவுர்ணமியையொட்டி நடப்பதால் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும். அதன்படி இந்தாண்டுக்கான   ஜேஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. ரங்கநாதர் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தங்க கவசங்கள் அகற்றி பால், தயிர், தேன், இளநீர் மற்றும் மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்களுடன் சிறப்பு யாகம் நடந்தது.

பின்னர் மாலை வைர கவசம் அணிவிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி கோயிலுக்குள் வலம் வந்தார். இந்நிலையில் ஜேஷ்டாபிஷேகத்தின் 2வது நாளான இன்று முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி கோயிலுக்குள் வலம் வரவுள்ளார். 3வது நாளான நாளை மாலை உற்சவர்களுக்கு மீண்டும் தங்கக்கவசம் அணிவிக்கப்படும். இதற்கிடையே, திருபபதியில் இருந்து திருமலைக்கு 8ம் தேதி முதல் ஒரு நாளைக்கு 100 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Tags : Swamy Swami Aruppalippu ,Swami Aruppalipu , Swami Aruppalipu, mounted , diamond shield
× RELATED முக கவசம் முக்கியம்