×

குஜராத்தில் காங். எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் திடீர் ராஜினாமா: ஆரம்பித்தது மாநிலங்களவை தேர்தல் ஆட்டம்

காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் நேற்று திடீரென தங்கள் பதவியை  ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை பதவிகள் காலியாகின்றன. இவற்றுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாகும் அனைத்து பதவிகளையும் பாஜ தானே பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டிருப்பதாக நேற்று முன்தினம்தான் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன. இதற்காக எதிர்க்கட்சிகள் எம்எல்ஏ.க்களிடம் குதிரைப்பேரம் நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அக்ஷ்ய் படேல் மற்றும் ஜித்து சவுத்ரி ஆகியோர் நேற்று முதல்வர் ரூபானியை சந்தித்து பேசினர். பின்னர் வெளியே வந்த அவர்கள், நேராக சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த அவர்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாகவம், அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்ததாகவும் கூறினர்.

உடனடியாக சபாநாயகர் அவர்களது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை உறுப்பினர்களில், பாஜ.விற்கு 103 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 68 உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு முக்கியம் என்பதால் காங்கிரஸ் பலத்தை குறைக்க எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா படலம் அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையே, மேலும், சில காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று பாஜ தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

Tags : Election ,Gujarat ,Rajya Sabha ,Congress , Cong,Gujarat,Two MLAs Sudden Resignation,Starts Rajya Sabha Election
× RELATED முழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதில்...