×

அலுவலகங்களில் கைகழுவ ஏற்பாடு செய்யாததால் அச்சமுடன் பணியாற்றும் அரசு ஊழியர்கள்

* வழிகாட்டி நெறிமுறையை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள்

சென்னை: அரசின் உத்தரவை அரசு அலுவலகங்கள் பின்பற்றாததால் கொரோனா அச்சத்தில் ஊழியர்கள் வேலை பார்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.  தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.  அதாவது ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வரும் போது, நன்றாக கை கழுவி விட்டு சானிடைசர் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சென்னையில் டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கட்டிடம், 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலக கட்டிடத்திற்கு வரும் ஊழியர்கள் கை கழுவி வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

 இந்த கட்டிடத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி காரணமாக அடிக்கடி வருவது வழக்கம். அதனால் அரசின் உத்தரவு இங்கு முழு அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே வளாக கட்டிடத்தில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் இதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை,.  தலைமை செயலகத்திலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழ்நிலையில் அங்கும் இதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்கின்றனர். அரசின் பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது என ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் சற்று குறைவாக இருப்பதால் அங்கு ஊழியர்கள் வருகை அதிகமாக உள்ளது. ஆனாலும் அங்கும் இதுபோன்ற ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்று ஊழியர்கள் புலம்புகின்றனர்.  இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக பயன்படுத்தி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அலட்சியம் காட்டினால் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகிவிடும் என்பது அவர்களின் புலம்பலாக உள்ளது.

Tags : Government employees ,offices , Offices, civil servants, corona, curfew
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்