எப்ப வந்த.. நல்லா இருக்கியாப்பா.. அன்பொழுக விசாரிக்கும் கலாச்சாரம் முடிந்தது: சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் சந்திக்கும் அவலம்

சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றால் ஓடோடி வந்து எப்போது வந்தாய், நல்லா இருக்கீங்களா? என்று அன்போடு நலம் விசாரிக்கும் கலாச்சாரம் ஓய்ந்தது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் பேசுவதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால், சொந்த ஊர்களுக்கு சென்றால் வீட்டை வீட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர். தமிழகத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  மற்றும் உயிரிழப்பு சென்னையில் தான் அதிகம். அதாவது சென்னையில்  பாதிப்பு மட்டும் 16 ஆயிரத்தை கடக்க உள்ளது.  பலி எண்ணிக்கை 138  ஆக பதிவாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும், கொரோனாவின் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர்.

இதே நிலை தான் சென்னைக்கு பக்கத்தில் உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் நீடித்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்ட உடனே பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசின் இ-பாஸ் மூலம் சிறப்பு அனுமதி பெற்று பலர் தங்களது மகன், மகள், குழந்தைகள், மனைவி, வயதான பெற்றோரை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர். குறிப்பாக சென்னை மற்றும் பக்கத்து மாவட்டத்தில் உள்ள தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முக்கால்வாசி பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கே தான் இந்த நிலைமை என்றால் சொந்த ஊர்களுக்கு சென்றால் அங்கு படும் பாடு கொரோனா பாதிப்பை விட அதிகமாக உள்ளது.

வழக்கமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு சொந்த ஊர்களில் நல்ல மதிப்பு இருந்து வந்தது. அதிலும் சென்னையில் இருந்து வாரேன் என்று சொன்னால் உபசரிப்பே வித்தியாசமாக இருக்கும். சொந்த ஊரில் இறங்கியது முதல் வீடுகளுக்கு செல்லும் வரை அந்த ஊர்களில் உள்ளவர்கள் அனைவரும் “எப்போது வந்தாய், நல்லா இருக்கீங்களா? என்று அன்போடு நலம் விசாரிக்கும் கலாசாரம் இருந்து வந்தது. கொரோனாவால் தற்போது அந்த கலாச்சாரம் அடியோடு ஓய்ந்துள்ளது. சென்னையில் இருந்து வருகிறான் கொரோனா வைரஸை கொண்டு வந்து இருப்பானோ, அந்த நோய் நம்மல தாக்கி விடும் என்று அங்குள்ளவர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதனால் பக்கத்தில் வந்து நலம் விசாரிக்கவே பயப்படுகின்றனர். சொல்ல போனால் சொந்த உறவினர்களே பக்கத்தில் வந்து பேசுவதற்கு பயப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தள்ளியே நின்று பேசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலர் தூரத்தில் வருவதை பார்த்தாலே ஒளிந்து வேறு தெரு வழியாக செல்கின்றனர். இதனால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் வெளியே செல்லவே தயங்கி வருகின்றனர். உறவினர்கள், நண்பர்கள் நம்மல பார்த்து பயப்படுகிறார்களே? என்று அவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி வருகின்றனர். இன்னும் சிலர் சென்னையிலேயே இருந்து இருக்கலாமோ என்று எண்ண தொடங்கியுள்ளனர். சொந்த ஊரே கை விட்டால் நாங்கள் எங்கே செல்வது என்றும் பலர் புலம்ப தொடங்கியுள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் பாதிப்பு குறையும் வரை வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு சொந்த ஊர்களுக்கு வருபவர்களுக்கு மரியாதை கிடைக்காது என்ற நிலை தான் தற்போது உருவாகியுள்ளது.

Related Stories: