×

பத்தாம் வகுப்பு தேர்வு: ஆசிரியர், மாணவர்களுக்கு 46.30 லட்சம் மாஸ்க்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ- மாணவியர், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்க 46 லட்சத்து 30 ஆயிரம் மாஸ்க்குகளை பள்ளிக் கல்வித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.  ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி தொடங்குகிறது. அத்துடன் பிளஸ் 1 வகுப்பு தேர்வில் மீதம் உள்ள 3 தேர்வுகள், பிளஸ் 2 தேர்வின் இறுதிநாளில் போக்குவரத்து வசதியின்மை காரணமாக தேர்வு எழுத வர முடியாமல் போன சுமார் 34 ஆயிரம் மாணவ மாணவியருக்கான தேர்வு ஆகியவை நடக்க இருக்கின்றன.  இந்த தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்து வருகிறது. கொரோனா பாதிப்பு பகுதிகளில் உள்ள மாணவர்கள் சிறப்பு தேர்வு மையங்களில் தேர்வு எழுது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  இத்தேர்வுகளை பாதுகாப்புடன் நடத்தும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மாஸ்க் அணிந்து தேர்வு எழுத வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், மற்றும் தேர்வுத்துறை பணியாளர்கள் என தேர்வுத் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சமூக நலத்துறை 46 லட்சத்து 30  ஆயிரம் முகக்கவசங்களை தயாரித்துள்ளது. இந்த முகக்கவசங்கள் மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் முகக்கவசங்கள் அனுப்பி வைக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. இந்த வாரத்துக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்கண்ட முகக்கவசங்கள் சென்று சேர்ந்துவிடும்.

இதையடுத்து, 15ம் தேதி தொடங்கும் தேர்வின்போது மாணவ மாணவியருக்கு முகக் கவசங்கள் வழங்கப்படும். தேர்வுகள் 25ம் தேதி வரை நடக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் இந்த முகக் கவசம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகு ஜூலையில் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இன்று ஹால்டிக்கெட்
பத்தாம் வகுப்பு தேர்வுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் ஜூன் 15ம் தேதியும்,  அத்துடன், மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 வகுப்புக்கான 3 தேர்வுகள் ஜூன் 16ம் தேதியும், மார்ச் 24ம் தேதி நடந்த பிளஸ்2 தேர்வில் பங்கேற்க முடியாமல் போனவர்களுக்கான தேர்வு ஜூன் 18ம் தேதியும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில், மேற்கண்ட தேர்வுகளை எழுத விண்ணப்பித்து இருந்த தனித் தேர்வர்கள் (தட்கல் உள்பட) இன்று பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 மாணவர்களை பொறுத்தவரையில் இன்று பிற்பகல் முதல் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அல்லது மேற்கண்ட தேர்வுத்துறை இணைய தளத்தில் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Tags : School Education Department , Tenth grade exam, teacher, students, mask, school education
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி...