×

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக கிருமி நாசினி தெளிக்க 25 மோட்டார் சைக்கிள்:முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சென்னையில் கிருமி நாசினி தெளிக்க 25 இரு சக்கர வாகனங்களின் சேவைகளை முதல்வர் எடப்பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழகமெங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரில் மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதிகள், பேருந்து நிலையங்கள் என சுமார் 45,000 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளதால், அந்த சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் செலவில் 25 இருசக்கர வாகனங்கள் மற்றும் தெளிப்பான்கள் வாங்கப்பட்டன.

இந்த வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று, சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகனங்களில் காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு மணிநேரத்தில் 1,620 லிட்டர் கிருமி நாசினியை தெளிக்க இயலும். சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் முடிவுற்ற பிறகு, இந்த வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.


Tags : CM ,Edappadi , Corona virus, antiseptic, 25 motorcycle, CM Edappadi
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!