×

வெடிகுண்டு நிபுணர் அப்துல் ரஹ்மான் உட்பட ஜெய்ஷ் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிரடி

காஷ்மீர்:   ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின், கன்கன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சுட்டனர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  பலியான தீவிரவாதிகளில் ஒருவனான அப்துல் ரஹ்மான் என்கிற பவுஜி பாய், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு அதிநவீன வெடிகுண்டுகளை செய்து கொடுப்பதில் நிபுணராக செயல்பட்டு வந்தான். இவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவன். கொல்லப்பட்ட மற்ற 2 தீவிரவாதிகளை அடையாளம் காணும் முயற்சி தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறுகையில், “புல்வாமாவில் கடந்த 28ம் தேதி மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்காக வெடிப் பொருட்களுடன் வந்த காரை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அப்போது, காரில் வந்தவன் தப்பிச் சென்றாஜ். அவனை விரைவில் பிடிப்போம் என உறுதி அளித்தோம். அது, தற்போது நடந்துள்ளது. கொல்லப்பட்ட அப்துல் ரஹ்மான், புல்வாமாவில் கடந்த 2019ம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு உடையவனா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால், புல்வாமாவில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவன் என்பது மட்டும் உறுதி. மேலும், ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் உறவினரா என்ற தகவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை,” என்றார்.

ஜெய்ஷ் தளபதிக்கு நெருக்கமானவன்
கொல்லப்பட்ட அப்துல் ரஹ்மானின் உண்மையான பெயர் இக்ரம் என்றும், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவ் அஸ்காருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன் என்றும் கூறப்படுகிறது. அப்துல் ரவ் அஸ்கார் 1999ம் ஆண்டு கந்தகாருக்கு இந்திய விமானம் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தீவிரவாத தலைவன்கள் காலி
ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ரியாஸ் நாய்கோ, போஸ்டர் பாய் ஜூனைத் ஷேராய், லஷ்கர் அமைப்பின் தலைவன் ஹைதர், தற்போது அப்துல் ரஹ்மான் உட்பட பல முக்கிய தீவிரவாத தலைவன்களை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி உள்ளன.

Tags : Defense forces ,Abdul Rahman ,militants ,Kashmir ,Jaish , Bomb Expert Abdul Rahman, Jaish extremists, Assassins
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த...