×

அமெரிக்காவில் முக்கிய நகரங்கள் முழுவதிலும் ஊரடங்கை மீறி மக்கள் அமைதி பேரணி: 8வது நாளாக தொடரும் போராட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது, போலீஸ் அதிகாரியால் முழங்காலால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரமாக பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இரவு நேர போராட்டங்களில் கடும் வன்முறை சம்பவங்களால் அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.    கடந்த 1968ல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு இப்போதுதான் மிக பயங்கரமாக இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து 8வது நாளாக நேற்று முன்தினம் போராட்டம் தொடர்ந்தது. ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, செயின்ட் பால், நியூயார்க், வாஷிங்டன் என அனைத்து முக்கிய நகரங்களிலும் போராட்டம் பரவியிருக்கிறது. ஆனால், கடந்த ஒருவாரத்தை காட்டிலும் நேற்று முன்தினம் இரவு போராட்டங்கள் அமைதியான முறையிலேயே நடந்தது. இதற்கிடையே, அதிபர் டிரம்ப் உத்தரவை தொடர்ந்து நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. மக்கள் அனைவரும் மாலைக்குப் பிறகு வீடு திரும்ப வேண்டும் என்றும் போலீசார் மீதான தாக்குதலை அரசு ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்காது என நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ எச்சரித்துள்ளார்.

அதிக வன்முறை சம்பவங்கள் நிகழும் நியூயார்க்கில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை வன்முறையாளர்கள் 4 போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை சம்பவங்கள் குறைந்தாலும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. அதே சமயம், போராட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறினால் ராணுவம் களமிறக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். தற்போது வன்முறைகள் பெருமளவு குறைந்துள்ளதால் ராணுவத்தை களமிறக்கும் அரசின் நடவடிக்கையில் தீவிரம் குறைந்துள்ளது.

இந்த மாணவிதான் காரணம்
கடந்த மாதம் 25ம் தேதி ப்ளாய்டுக்கு என்ன நடந்தது என்பது குறித்து 17 வயது கருப்பின மாணவி டார்னெல்லா ப்ரேசர் வீடியோ எடுத்தார். அதில், ப்ளாய்ட் கொடுத்த 20 டாலர் நோட்டு கள்ளநோட்டு என கடைக்காரர் தகவல் தர போலீசார் வருகின்றனர். ப்ளாய்டின் காரை நிறுத்தச் சொல்ல, அவர் நிறுத்தாமல் செல்ல முயல அவரை மடக்கினர். ஒரு அதிகாரி தனது முட்டியால் ப்ளாய்டின் கழுத்தை நெரித்தபடி கீழே அமுக்க அவர் மூச்சு விட முடியாமல் இறக்கிறார். 46 விநாடி ஓடும் இந்த வீடியோ தான் அமெரிக்காவை ரணகளமாக்கி உள்ளது. அந்த சமயத்தில் என்ன செய்வது என தெரியாமல், ப்ளாய்டை காப்பாற்ற செல்லாமல், குழம்பிப் போய் நின்றாக ப்ரேசர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ஐரோப்பாவிலும் பரவியது
ப்ளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டம் அமெரிக்காவை தாண்டி ஐரோப்பாவிலும் பரவியிருக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று சுமார் 20,000 பேர் கூடி அமைதி பேரணி நடத்தினர். நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் நாட்டிலும் கறுப்பினத்தவர்கள் பல்வேறு அமைதி போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச பிரச்னையாக உருவெடுத்து அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை புதிய சிக்கலுக்குள்ளாக்கி உள்ளது.

அஞ்சலி செலுத்த 60,000 பேர் திரண்டனர்
ஜார்ஜ் ப்ளாய்ட்டின் சொந்த மாகாணமான ஹூஸ்டனில் நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் அமைதிப் பேரணி நடந்தது. இதில், 60 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்றனர். ப்ளாய்டின் குடும்ப உறுப்பினர்கள் 16 பேர் பங்கேற்றனர். ஒன்றரை கிமீ தூரம் நடந்த இப்பேரணியில் ‘சுடாதீர்கள்’, ‘நீதி இல்லையேல், அமைதியில்லை’ என மக்கள் கோஷமிட்டபடி, ப்ளாய்ட்டுக்கு இரங்கலும் தெரிவித்தனர்.

தேவாலயத்தை பார்வையிட்டார்
வாஷிங்டன்னில் வெள்ளை மாளிகை அருகே கடந்த திங்கட்கிழமை நடத்த போராட்டத்தின் போது, ஒரு பிரிவினர் அங்குள்ள பாரம்பரிய தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர்.  இந்த தேவாலயத்தை பார்வையிட்ட, அதிபர் டிரம்ப், எரிந்து கிடந்த பைபிள் புத்தகத்தை பத்திரிகையாளர்கள் மத்தியில் காண்பித்தார். டிரம்ப் வருகையையொட்டி, தேவாலயத்தின் அருகே போராட்டத்தில் இருந்த மக்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். பதற்றத்துக்கு மத்தியில் அதிபர் டிரம்ப் பைபிளுடன் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தது கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.

இது குறித்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடேன் கூறுகையில், ‘‘பைபிளை கையில் வைத்திருப்பதற்கு பதிலாக அதை டிரம்ப் திறந்து படித்திருக்கலாம். அவர் அதைத் திறந்திருந்தால், ஏதாவது கற்றுக் கொண்டிருக்கலாம். நம்மை நாமே நேசிப்பதை போல மற்றவர்களை நேசிக்க வேண்டும். இது மிகவும் கடினமானது. ஆனாலும் நமக்கு தற்போது அவசியமானது’’ என்றார்.


Tags : Peace Rally ,8th Day ,United States ,Peace Rally Over Curfew ,Cities , USA, curfew, continue fight
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்