×

விவசாயிகள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம்: ஒரே நாடு, ஒரே சந்தை திட்டம் மத்திய அமைச்சரவை அனுமதி

* வெங்காயம், சமையல் எண்ணெய் இனி அத்தியாவசிய பொருட்கள் கிடையாது

புதுடெல்லி:  மத்திய அமைச்சரவையில் 3 முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும், மாநிலங்களுக்கு இடையே பொருட்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என ரூ.20 லட்சம் கோடி கொரோனா நிவாரண நிதி தொகுப்பு அறிவிப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், ஒரே நாடு, ஒரே சந்தை, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம், விளைபொருட்களுக்கான விலை உறுதி ஆகிய 3 சட்டத் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக 3 வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள்  சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கும் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பொருட்களை விவசாயிகள் தங்களின் விருப்பப்படி ஏற்றுமதி செய்யலாம், இருப்பு வைக்கலாம். இதன் மூலம், நல்ல லாபம் ஈட்ட முடியும். இது விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கையாகும். தேசிய பேரிடர், போர் உள்ளிட்ட அவசரகாலங்களைத் தவிர மற்ற எந்த நேரத்திலும் இவை அத்தியவாசிப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படாது.

அடுத்ததாக, விவசாய விளைபொருட்கள் வர்த்தகம் மற்றும் வணிக சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்திற்கு வெளியிலும் தடையின்றி வர்த்தகம் செய்யலாம். உணவுப் பொருள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும். இது நாட்டில் பரவலாக ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாய சந்தைகளை அமைப்பதற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாகும். மேலும், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல், பாதுகாப்பு) விலை உத்தரவாதம், பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டத்தில் திருத்தம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது சுரண்டலுக்கு பயப்படாமல், ஏற்றுமதியாளர்கள், இடைத்தரகர்கள், பெரு சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.  மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா துறைமுகம், ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Farmers, Essential Commodities, One Country, One Market Plan, Union Cabinet
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்