×

குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி மனைவி எரித்துக்கொலை: கள்ளக்காதலன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மனைவியை கூலித்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். அதில் கள்ளக்காதலனும் படுகாயம் அடைந்தார்.  சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் அன்பானந்தம் 3வது தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல்முருகன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (34). 13 வயதில் மகள் உள்ளார்.  லட்சுமி வீட்டின் அருகே செக்யூரிட்டி வேலை செய்யும் கோவிந்தசாமி(62) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் லட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுகுறித்து லட்சுமியின் மகள் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மனைவியின் கள்ளக்காதலை பல முறை கண்டித்தும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவால் செந்தில் வேல்முருகன் வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

குடும்பம் நடத்தவும் போதிய வருமானமின்றி மனைவி லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவரின் தொந்தரவை தாங்க முடியாமல் லட்சுமி கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன் மற்றும் மகளை விட்டுவிட்டு தனியாக வசித்து வரும் கள்ளக்காதலன் கோவிந்தசாமி வீட்டிற்கு  சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் வேல்முருகன் தனது மனைவி லட்சுமியை சேர்ந்து வாழ கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று பல முறை அழைத்துள்ளார். ஆனால் லட்சுமி, ‘நான் கோவிந்தசாமியுடன்தான் வாழ்வேன்’ என்று கூறி காதலனுடனேயே தங்கிவிட்டார்.

 இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மீண்டும் செந்தில்வேல் முருகன் தனது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று அழைத்தார். அப்போது லட்சுமி மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தசாமி ஆகியோர் செந்தில் வேல்முருகனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனால் அவமானம் தாங்காமல் செந்தில் வேல்முருகன் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு தனது மனைவி மற்றும்  அவரது கள்ளக்காதலனை கொலை செய்ய முடிவு செய்தார். 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி கொண்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். லட்சுமி கதவை திறந்ததும் செந்தில்வேல் முருகன் கையில் கொண்டு வந்த பெட்ரோலை மனைவி லட்சுமி மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தசாமி மீது ஊற்றி மின்னல் வேகத்தில் தீ வைத்து கொளுத்தினார்.  

இதை சற்றும் எதிர்பார்க்காத லட்சுமி மற்றும் கோவிந்தசாமி உடல் முழுவதும் தீ பிடித்து அறையில் அங்கும் இங்கும் ஓடி அலறி துடித்தனர்.  உடனே செந்தில்வேல் முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். மேலும், சம்பவம் குறித்து  எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார்  108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த லட்சுமி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது கள்ளக்காதலன் கோவிந்தசாமி 60 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

 இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் தலைமறைவாக இருந்த செந்தில்வேல் முருகனை நேற்று இரவு கைது செய்தனர். மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கோவிந்தசாமியிடம் எழும்பூர் பெருநகர குற்றவியல் தனி நடுவர் மரண வாக்குமூலம் பெற்றார்.


Tags : hospital , Petrol, wife burned, counterfeit, hospital
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...