×

முத்தமிழ் அறிஞர் 97வது பிறந்தநாள் கலைஞர் ஆற்ற நினைத்த தொண்டுகள், லட்சியத்துடன் பயணம் தொடர்கிறோம்: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு

சென்னை: கலைஞர் ஆற்ற நினைத்த காரியங்கள், தொண்டு, கனவுகள் மற்றும் லட்சியங்களை எங்கள் ேதாள்மேல் போட்டு பயணத்தை தொடர்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘தமிழ்த்தாயின் ஆண் வடிவமே, மூத்த தமிழினத்தின் முழு உருவமே எங்களின் உயிரின் உயிரே’ என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவைப் போற்றி திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  டிவிட்டரில் செய்தி பகிர்ந்து, காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்ற சொற்றொடரை காந்தக்குரலில் உச்சரித்து லட்சக்கணக்கான உடன்பிறப்புகளைச் சொக்கவைத்து அவர்தம் உள்ளங்களில் புத்துணர்ச்சியையும் ரத்தத்தில் புதுச் சூட்டையும் உற்பத்தி செய்கின்ற நம் ஆருயிர்த் தலைவர் கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காகவும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய இனத்தின் இன்ப மொழியாம், ஏற்றமிகு தமிழின் தனித் தத்துவ விளக்கமாகவும் வாழ்ந்த முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 97-ம் ஆண்டு பிறந்தநாள் - ஜூன் 3ம், அதுதான் அந்தத் தமிழ்ப் பொதிகை, அகிலம் போற்றும் திராவிடச் சூரியன், உதயமான நாள்.

ஜூன் 3ம் நாள் கலைஞர் - மாபெரும் மக்கள் இயக்கத்தின் மகத்தான தலைவர் மட்டுமல்ல; கலைஞர் - கழகத்தின் அரை நூற்றாண்டு தலைவர் மட்டுமல்ல, கலைஞர் - கன்னித்தமிழ் நாட்டின் தலைவர் மட்டுமல்ல, கலைஞர் - மூத்த தமிழினத்தின் முத்தான தலைவர் கலைஞர் - ஜனநாயகத்தின் காவலர். கலைஞர் - இந்த நூற்றாண்டின் சரித்திரத் தலைவர் இன்னும் மூன்றே ஆண்டுகளில் நூற்றாண்டு விழா காணப்போகும் தலைவர். அவரை வயதும் உடலும் அனுமதித்திருக்குமானால், அந்த தமிழ்த்தாயின் ஆண்வடிவமாக இன்று கம்பீரமாக வீற்றிருந்திருப்பார்.

எங்களை வாழ்த்துங்கள் என்று நாமனைவரும் அவர் தாள் பணிந்து வணங்கி நின்றிருப்போம். காலம் அவரை நம்மிடமிருந்து கண்காணாத தூரத்துக்கு எடுத்துச் சென்று தன்னோடு கருவூலமாக வைத்துப் பாதுகாத்துக் கொண்டுவிட்டது. வங்கக் கடலோரம் கடலலையின் வாஞ்சை மிகுந்த தாலாட்டில் தனது ஆருயிர்த் தலைவராம் அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் என் உயிரான தலைவரே.

உன்னிலிருந்து என்னை எடுத்து உருவாக்கிய உயர்வான தந்தையே உங்களின் 97-வது பிறந்தநாளில் வாழ்த்தி வணங்கவும், உங்களிடமிருந்து வாழ்த்துகளை வாங்கவும் நீங்கள் கோயில் கொண்டுள்ள கோபாலபுரம் வந்திருக்கிறேன். உங்கள் உருவம் இல்லை எனக்கு வாழ்நாள் பாடமாய் இருக்கும் உங்கள் திருவுருவப்படம் இருக்கிறது. ஆனால், உங்கள் உணர்ச்சியை இங்கே பெறுகிறேன். உங்கள் முதல் பிள்ளையின் வீடாம் முரசொலிக்கு வந்திருக்கிறேன். உங்கள் உருவமில்லை. உங்களின் உருவத்தில் எழுத்துகள் இருக்கின்றன. இங்கே உங்கள் கரகர குரல் காதில் கேட்கிறது. உங்களது முழுநேர மூச்சுக்காற்றாம் அண்ணா அறிவாலயம் வந்திருக்கிறேன். உங்கள் உருவம் இல்லை நீங்கள் இடும் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. உங்கள் குரலும் குரலின் உங்கள் உணர்ச்சியும் நாள்தோறும், நாளின் நொடிதோறும் என்னை வழிநடத்துகிறது. எம்மை வாழ்வாங்கு வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

மேடைக்குப் போனால் எல்லோரையும் வெல்லும் குரல் உங்களுடையதாகத்தான் இருக்கும். எழுதிக்காட்டினால் எல்லோருடைய எழுத்தையும் மிஞ்சி உங்கள் எழுத்து விண் உயர்ந்து நிற்கும். அரசியலில் மட்டுமா நீங்கள் ஆட்சி செய்தீர்கள்? இலக்கியத்தையும் எங்கே விட்டுவைத்தீர்கள்! இலக்கியம் மட்டுமா, திரையுலகில் உங்கள் தமிழ் ஆட்சியும் மாட்சியும் மறையாது. நீங்கள் ஆட்சி செய்த முறைகள், நிறைவேற்றிய சட்டங்கள், நீங்கள் உருவாக்கிய திட்டங்கள், உங்களால் படித்தவர்கள், உங்களால் வேலை பெற்றவர்கள், உங்களால் முன்னேறியவர்கள், உங்களால் வாழ்க்கை பெற்றவர்கள், வளம் பெற்றவர்கள் எத்தனை லட்சம் பேர் தலைவரே இவர்களை முன்னேற்றுவது தானே உங்கள் லட்சியம் தலைவரே தனக்காக அல்ல இந்த தரணிக்காக வாழ்ந்த வாழ்க்கை உங்களுடையது.

நீங்கள் நினைத்த காரியங்கள், மேலும் ஆற்ற நினைத்த தொண்டுகள், உங்களின் கனவுகள், உங்களின் லட்சியங்கள் அனைத்தையும் எங்கள் தோள்மேல் போட்டு பயணம் தொடர்கிறோம் தலைவரே எல்லா திசையிலும் உங்கள் பிள்ளைகள். எங்கு நோக்கினும் உங்கள் மாணவர்கள். தமிழின மேன்மையே எங்கள் எல்லைகள். கலைஞரின் தொண்டர்கள் என்றைக்கும் சோடை போனதில்லை என்பதை நிரூபித்துக்காட்டுவோம் தலைவரே. நூற்றாண்டை நெருங்குகிறது உங்கள் வயது. பலப்பல நூற்றாண்டுகள் பரவியிருக்கும் உங்கள் புகழ், கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க.

Tags : charity ,brainchild ,MK Stalin ,artist ,speech ,Muthamizh aringar ,kalaingar , Muthamizh aringar, 97th birthday, kalaingar, MK Stalin
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு...