×

கொரோனா சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய போலீசாருக்கு வரவேற்பு

சென்னை: சென்னையில் ஊர்க்காவல்படை காவலர்கள் தொடங்கி, கூடுதல் கமிஷனர் வரை கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் காவலர்களை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கே சென்று பூச்செண்டு கொடுத்து கவுரவித்து வருகின்றனர். இதன்மூலம் காவலர்கள் பணியின்போது கொரோனா குறித்து எந்தவித பயம் இன்றி தொடர்ந்து தங்களது பணிகளை செய்ய இது உபயோகமாக இருக்கும் என உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகானந்தம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

நேற்று வழக்கம்போல் தனது பணியை தொடங்குவதற்கு காவல்நிலையம் வந்தார். அப்போது, சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஜெய்சிங், எம்கேபி நகர் உதவி கமிஷனர் ஹரிகுமார், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, வள்ளி உள்ளிட்ட போலீசார் உதவி ஆய்வாளருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். மேலும், அவருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல், ஏழுகிணறு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல்நிலை காவலர் ராஜ்குமார் கடந்த 13ம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். பிறகு குணமடைந்த காவலர் ராஜ்குமார் பணிக்கு திரும்பினார். இதனையடுத்து, காவல்நிலையத்தில் அவருக்கு பேண்டு வாத்தியதுடன் ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags : Corona , Corona treatment, police, curfew
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...