×

சேரன்மகாதேவியில் சிதிலமடைந்த குறுகிய பாலத்தில் தொடர்கதையாகும் விபத்து: புதிய பாலம் கட்டப்படுமா?

வீரவநல்லூர்: சேரன்மகாதேவியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள குறுகிய பாலத்தில் அவ்வப்போது விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது. இதனால் அவதிப்படும் மக்கள், மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்னர் புதிய புதிய பாலம் கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். சேரன்மகாதேவி முனைசேகரன் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் பிரதான நுழைவு வாயில் சேரன்மகாதேவி போலீஸ் ஸ்டேசன் வடபுறம் உள்ளது. இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த ஒரு வழிப்பாதையே பயன்படுத்தி வருகின்றனர்.

சேரன்மகாதேவி - களக்காடு சாலையுடன் இணைக்கும் இந்த இணைப்பு சாலையின் ஆரம்பத்தில் குறுகலான பாலம் முறையான பராமரிப்பின்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சிதிலமடைந்தது. ஆனால், இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்தனர். இதனால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு மனு அளித்து வந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க டென்டர் விடப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சாலையின் ஆரம்பத்தில் உள்ள பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விபத்து தொடர்கதையாகி வருகிறது.

 இதுகுறித்து 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம்தேதி தினகரனில் செய்தியும் வெளியானது. ஆனாலும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் அடிக்கடி விபத்து நடப்பது தொடர்கதையாகி விட்டது. அந்த வகையில் நேற்று முன்தினம் அப்பகுதியாக வந்த மினி லாரி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. எனவே பள்ளி மாணவர்களை ஏற்றும் வேன்கள் வந்துசெல்லும் இப்பகுதியில் உயிர்சேதம் ஏற்படும் முன்னர் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags : bridge ,accident ,Cheranmagadevi , Cheranmagadevi, Short Bridge, Accident
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!