×

விகேபுரத்தில் சமூக விலகலை மறந்த மக்கள்; படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் ஆபத்தான பயணம்: கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

வி.கே.புரம்: 67 நாட்களுக்கு பிறகு பாபநாசம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து நேற்று முன்தினம் முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் சமூக விலகலை மறந்து பஸ்களில் அளவுக்கு அதிகமாக முண்டியத்து ஏறிய பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். இதனால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுமா? என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் உள்ள 61 பஸ்கள், ஊரடங்குக்கு முன்னர் வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும் சென்று வந்தன.

பின்னர் ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பஸ்களை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு இயக்குவதற்கான அனுமதியை அரசு வழங்கியது.
இதன்படி பாபநாசத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் 32 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு பாபநாசத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட பஸ்சில் சமூக விலகலை கடைபிடிக்காமல் ஏராளமான பயணிகள் முண்டியடித்து ஏறினர். வி.கே.புரம் மூன்று விளக்கு பஸ்ஸ்டாப் பகுதிக்கு வந்தபோது 50 பேருக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

இதேபோல் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட அனைத்து ஸ்டாப்களிலும் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏறியதால் பஸ் நிரம்பி வழிந்தது. இதனால் ஒரு சிலர் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். இதனிடையே நெல்லைக்கு அரசு பணிக்கு செல்லும் ஊழியர்கள் காலை வேளையில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : People Forgetting Social Distortion ,passengers , Wigepuram, social exclusion, extra buses
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து