×

கீழடி அருகே மணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி

திருப்புவனம்: கீழடி அருகே மணலூரில் தொன்மையான வட்ட வடிவ உலைகலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப். 19ம் தேதி ரூ.40 லட்சம் செலவில் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் துவங்கியது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 24ல் இப்பணிகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின் கடந்த மே 20ல் கீழடி, அகரம் ஆகிய இடங்களில் மட்டும் அகழாய்வு பணிகள் துவங்கின.

அதன்பின் கீழடி அருகே மணலூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2 ஏக்கர் பரப்பளவில் மே 22ம் தேதி பணிகள் துவங்கின. இங்கு 2 குழிகள் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக அகழாய்வு பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று மணலூரில் உள்ள ஒரு குழியில் உலை கலன் கண்டறியப்பட்டது. இந்த உலை கலன் ஒன்றரை அடி விட்டத்துடன் வட்ட வடிவில் கிடைத்துள்ளது. ஒற்றை செங்கற்களால் கட்டப்பட்ட இந்த உறைகலனானது, உலோகங்களை உருக்கி ஆபரணங்கள் செய்வது உள்ளிட்ட மற்ற பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். முழு அளவும் வெளிப்பட்டால்தான் இதனுடைய பயன்பாடு குறித்து, முழுமையாக தெரியவரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை நடந்த அகழாய்வில் வட்ட வடிவ உறை கிணறுகள் மட்டும் கிடைத்துள்ள நிலையில், தொழில் நகரமாக அறியப்படக்கூடிய ஆதாரம் கிடைத்திருப்பது தொல்லியல் ஆய்வாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கீழடியில் விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்களே அதிகளவில் கிடைத்தன. கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் அதிகளவில் கிடைத்ததால் இடுகாடாக இருக்க வாய்ப்புண்டு என கருதப்பட்டது. இந்நிலையில், உலைகலன் கிடைத்திருப்பது மணலூர் தொழில் நகரமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Archeologists ,Kodai ,Manalur , Subordinate, mythical furnace, invention
× RELATED கீழ்வேளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 70 செம்மறி ஆடுகள் பலி