×

கம்பம் அக்ரஹாரம் சாலையில் ஆள் விழுங்கி பள்ளம் : உயிர்ப்பலி ஏற்படும் அபாயம்

கம்பம்: கம்பம் கணபதி அக்ரஹாரம் தெரு நுழைவுப் பகுதியில் சாலையில் உள்ள மெகாசைஸ் பள்ளத்தில் ஆட்கள் விழந்து விபத்து ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் நகராட்சியின் இருபத்தி எட்டாவது வார்டு பகுதியில் கணபதி அக்ரஹாரம் உள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தெருவில் உள்ளனர். கம்பம் வஉசி திடல் வழி சுருளிப்பட்டி சாலையில் இருந்து பிரிந்து செல்லும் இந்த கணபதி அக்கிரகாரத்தில் நுழைவுப் பகுதியில், கடந்த ஆண்டு ரோட்டு ஓரத்தில் கழிவுநீர் சாக்கடை அருகே சிறு பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்போது அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தபோது யாரும் அதை பெரிது படுத்தவில்லை எனத்தெரிகிறது. தற்போது அந்தப் பள்ளம் ரோட்டின் பாதி அளவிற்கு மிகப் பெரிய பள்ளமாக மாறி உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் வைத்தள்ளவர்கள்.
மேலும் இப்பகுதியில் கோயிலும், வாகன காப்பகமும் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் அல்லது கால்நடையாக வரும் முதியவர்கள், சிறுவர்கள் யாராவது இந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து கம்பம் நகராட்சி ஆணையருக்கு இப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை அந்த பள்ளத்தை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் பள்ளத்தை முட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சங்கரன் கூறுகையில், ‘ரோட்டின் இருபுறமும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்த இடத்தில் மட்டும் இருபதடி ரோடு சுமார் பத்தடி அளவே உள்ளது. புதிதாக இந்த தெருவுக்குள் வாகனங்களில் வருபவர்கள், நடுரோட்டில் உள்ள பள்ளத்தில் வாகனங்களை விட்டு மாட்டிக்கொள்ளும் சம்பவம் இங்கு வாடிக்கையாக உள்ளது. நகராட்சியில் பலமுறை மனுக்கொடுத்தும் அந்த பள்ளத்தை மூடுவதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை இந்த பள்ளத்தில் பொதுமக்கள் யாராவது விழுந்து விபரீதம் ஏற்பட்டால்தான் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? என்றார்.

Tags : agraharam road , Swallow ditch , pole agraharam,risk , livelihood
× RELATED வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியர் பலி