×

குடிநீர் வழங்க கோரி மறியல்

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 161வது பிளாக் முதல் 164 பிளாக் வரை உள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை, என கூறப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் மற்றும் முத்தமிழ் நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை முத்தமிழ் நகர் சந்திப்பு அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குடிநீர் வாரிய அலுவலர்கள் அங்கு வந்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது பகுதி பொது குழாய்களில் தண்ணீர் வந்து 3 மாதங்கள் ஆகிறது. லாரிகளிலும் சரிவர குடிநீர் வழங்குவதில்லை. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்தோம். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவிட்டதாக பொய்யான பதிலளித்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற அலட்சியப்போக்கு நீடித்தால், சாலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

Tags : Drink, stir
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...