×

திருவிக நகர் மண்டலத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட தலைமை செயலக காலனி ஏகே சாமி மடம் பகுதியை சேர்ந்த 57 வயது பெண், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்தார்.  இவருக்கு கடந்த 27ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கடந்த 31ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் மாலை அடக்கம் செய்யப்பட்டது.

* ஓட்டேரி சுப்புராயன் 5வது தெருவை சேர்ந்த 75 வயது நபர், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 31ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி கடந்த 1ம் தேதி மாலை உயிரிழந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அவரது உடல் நேற்று மாலை ஓட்டேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
* பெரம்பூரை சேர்ந்த 45 வயது நபருக்கு கடந்த 29ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதால் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கடந்த 31ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று பெரம்பூர் பிபி ரோடு சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

பரிசோதனைக்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு
தரமணி காமராஜ் தெருவை சேர்ந்தவர் சிங்காரம் (74). கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர், ரத்த பரிசோதனை செய்ய நேற்று காலை தரமணியில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு சென்றார். அங்கு, திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இறந்தது தெரிந்தது. இதுகுறித்து தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சிங்காரம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பிறகே, சிங்காரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என தெரியவரும், என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரயில்வே ஊழியர் உயிரிழப்பு
பம்மல் பகுதியை சேர்ந்த 45 வயது ரயில்வே ஊழியருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 29ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags : Corona ,Trivandrum Corona Kills 3 ,Trivandrum , Corona , tiruvika zone
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...