×

தலைமை செயலக ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா: ஊழியர்கள் வருகையை குறைக்க முதல்வரிடம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 18ம் தேதி முதல், அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி  சென்னை, தலைமை செயலக ஊழியர்களும் கடந்த 18ம் தேதியில் இருந்து பணிக்கு வந்தனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலக ஊழியர் ஒருவருக்கு கடந்த 20ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலக அறை மூடப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தலைமை செயலக ஊழியர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து அவர்களுடன் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து தலைமை செயலக ஊழியர் ஒருவர் கூறும்போது, “சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தபோது அரசு அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டது. தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அலுவலகம் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் பணியாற்றும் பலர் வடசென்னை உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இருந்துதான் வேலைக்கு வருகிறார்கள். சமூகநலத்துறையில் பணிபுரியும் உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட சுமார் 20க்கும் பேருக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கொரோனா பாசிட்டிவ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா வந்தாலும், வழக்கம்போல் மற்ற ஊழியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது” என்றனர்.

இதுகுறித்து தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி நேற்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தலைமை செயலகத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பழையபடி ஊழியர்கள் வருகையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும். மேலும், அரசு பேருந்தில் அதிகளவு ஊழியர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனால் அதிகளவில் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Chief Secretariat employees ,CM , Chief Secretariat Staff, Corona, Staff, Chief
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!