×

ஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.

புடாபெஸ்ட்: கொரோனா தொற்று பீதிக்கு பின் உலகில் முதல்முறையாக ரசிகர்களுடன் கால்பந்து போட்டி  ஹங்கேரியில் நடந்துள்ளது. தென் கொரியாவில்  கே லீக், ஜெர்மனியின்  பண்டெஸ்லிகா கால்பந்து தொடர்களை  தொடர்ந்து  இத்தாலியில் சீரி ஏ,  இங்கிலாந்தில்  பிரிமீயர் லீக், அடுத்து ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர்கள் இன்னும் சில நாட்களில் மீண்டும் தொடங்க உள்ளன.    இந்த போட்டிகள் எல்லாம்  மூடிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல்  நடக்கும் போட்டிகள்.  ஆனால், ஹங்கேரியில் முதல் முறையாக ரசிகர்களுடன் கால்பந்து போட்டி நடந்துள்ளது. ஹங்கேரியின் வடக்குப் பகுதியில் உள்ள  மிஸ்கோல்க் நகரில்  வார இறுதியில் நடைப்பெற்ற இந்த போட்டியை அந்நாட்டு கால்பந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.  

உள்ளூர் கால்பந்து கிளப்கள் மோதிய இந்த போட்டியை காண 2255 ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இது  அரங்கின் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு ஆகும். முகக்கவசம் அணிந்திருந்த ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்களுக்கு இடையே  4 இருக்கைகள் காலியாக விடப்பட்டன. அதேபோல் ஒரு வரிசையில் ரசிகர்கள், அடுத்த வரிசை காலியாகவும் விடப்பட்டிருந்தன. மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமானதை அடுத்து விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு ரசிகர்களுடன் போட்டி நடைபெற்றது இதுவே முதல்முறையாகும்.


Tags : Football match ,fans ,Hungary , Hungary, fans, football
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...